
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
பதிகங்கள்

வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.
English Meaning:
Upasanta State—The Tenth StateEntering into Upasanta experience,
Jiva becomes Siva;
There immersed in Siva-Bliss
Jiva into Siva merges;
Enjoying that Bliss experience
It abids constant there;
That Experience engrosses
All the ten of Jiva
(From Jagrat Upwards to Siva Turiya).
Tamil Meaning:
உபசாந்தம் பத்து நிலைகளையுடையதாகச் சொல்லப்படும்.1. கருவி கரணங்கள் உலகியல் வகையில் செயற்படாது, மெய்யுணர்வு நெறியில் செயற்படுதல். (இஃது யோகாவத்தை, இது முன்பு `சீவ துரியம்` எனப்பட்டது. இது கருவிகளின் மாற்றுச் செயல் ஆதலின், இதனை, வாதனை`` என்றார்).
2. ஆன்மாத் தன்னைக் கருவிகளின் வேறாக உணர்தல் (இஃது ஆன்ம தரிசனமாம். உள்ளம் - ஆன்மா; `ஆன்மா` என்றது, `ஆன்மாத் தான் ஆதல்` என்றபடி.)
3. ஆன்மாத் தன்னையிழத்தல். (அஃதாவது தற்போதம் நீங்குதலாம்.) ``போய்`` என்றது, `தான் போய்` என்றபடி.
4. தற்போதத்தை இழந்த ஆன்மாச் சிவனையே உணர்ந்து அவனேயாதல். (இதுவே தசகாரியத்துள் சொல்லப்படும் சிவயோகம். ஆன்ம தரிசனத்தில் சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி சிவதரிசனத்தில் தொடங்கி சிவயோகத்தில் முற்றுப்பெறும்.)
5. சிவானந்தம் உதயமாதல். (இது சிவயோகத்தில் முடிநிலையில் நிகழும்.)
6. உயிர் சிவானந்தத்தை அனுபவித்தல். (இஃது `ஆனந்தானுபவம்` எனப்படும். இதில் உயிருக்கு, `நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வு நிகழும்.)
7. உயிர் ஆனந்தத்தில் அழுந்துதல். (இதில் அந்த உணர்வும் இல்லாதொழியும்.) இஃது `ஆனந்தாதீதம்` எனப்படும். (இரண்டு முதல் 5 முடிய உள்ள நான்கும் நின்மலாவத்தையில் சாக்கிர, சொப்பன, சுழுத்தி, துரிய அவத்தைகளாம். 6,7 நின்மல துரியாதீதமாம்.)
8. சகலரினின்று பிரளயாகலர்களாகப் பெற்ற உயிர்களும், பிரளயாகலரில் பக்குவம் பெற்ற உயிர்களும் பின் விஞ்ஞானகலராய் இறைவனால் திருவருள் செய்யப்பெற்றுச் சுத்த புவன போக்கியப் பொருள்களால் இன்புற்றிருத்தல்.
9. அதற்கு மேலும் சுத்த புவன அதிபதிகளாய் ஆட்சி புரிதல். (இவை `அபர முத்தி` எனப்படும்).
10. இங்குக் கூறிய இவைகளில் ஒன்றும் இன்றிச் சிவனோடு இரண்டறக் கலந்து அவனது வியாபகத்தில் அடங்கி விடுதல் என்பன. (இறுதி மூன்றும் பராவத்தைகளாம். அவற்றுள் பத்தாவதே பரமுத்தியாம்.)
Special Remark:
`இங்குக் கூறியன எல்லாம் உபசாந்தம்; எனப்படு மாயினும் பராவத்தையே உண்மை உபசாந்தம். என்பதும், அவற்றுள் பர முத்தியே முடிநிலை`- என்பதும் கருத்துக்கள் ``சிவானந்தத்து`` என்றதனால் சிவானந்தம் உதயமாதல் பெறப்பட்டது. ``தோய்ந்து`` என்றதனால், தோய்தலும் வேறொன்ற ாயிற்று. ``மோனம்`` என்றது அமைதியை; அது துன்பம் இன்மையைக் குறித்தது. ``அனுபவத் தொடே`` என்னும் ஒடு, எண் ஒடு. ஆய்தல் - இங்கு முற்றுணர்வுபெற்று எல்லாவற்றையும் அறிதல் ஆகவே, அஃது ஆட்சி செய்தலாயிற்று. `உபசாந்தம் ஈரைந்துமே` என முடிக்க. ஏகாரம் தேற்றம்.இதனால், ஞானச் செய்தியாவன பலவும் உபசாந்தத்தின் படிநிலைகளாகத் தொகுத்துணர்த்தப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage