
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
பதிகங்கள்

மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.
English Meaning:
Linga`s Nine AspectsBrahma, Vishnu, Rudra, Mahesa,
The five-faced Sadasiva, Bindu and Nada
Sakti and Siva—
All these as Linga His blessings grants,
He is but Nandi that is Para Supreme.
Tamil Meaning:
சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறி யாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.Special Remark:
``மலர்ந்த`` என்றதனை இசை யெச்சத்தால் மாயோனது உந்திக் கமலம் மலர்ந்த` என விரித்துக் கொள்க. `மலர்ந்த` என்னும் பெயரெச்சம் `மலர்ந்ததனால் வெளிப்பட்ட` எனப் பொருள் தந்தது.அயன், மால் முதலிய ஒன்பது நிலைகளும் ``நவந்தரு பேதம்`` எனப்படும். அதனை
``சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்றான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்
பவ்தரும்; அருவம்நால்; இங்(கு) உருவம்நால்; உபயம்ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்`` l
என்னும் சிவஞானசித்திச் செய்யுளால் உணரலாம். இவற்றை ``இங்ஙனம் ஒன்றின் ஒன்றாய்ப் பவம்தரும்`` - என்றமையால், `இம்முறை தோற்றமுறை` என்பது விளங்கிற்று. எனவே, இம்மந்திரத்தில் நாயனார் அயன் முதலாகக் கூறியது ஒடுக்க முறையாதல் வெளிப்படை.
``பரநாதம்`` - என்பதில் உள்ள ``பரம்`` என்பதை விந்துவிற்கும் கூட்டுக. பரநாத பரவிந்துக்களையே `சிவம், சத்தி` எனவும், சிவம் சத்திகளையே `நாதம், விந்து` எனவும் வழங்கும் வழக்கம் ஆகமங்களில் உண்மையால் மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அவ்வாறு கூறப்பட்டது.
நவந்தரு பேதங்களாய் நிற்கின்ற சிவன் தனது ஞானத்தால் தன்னை அவ்வந் நிலைகளில் உணர்ந்து வழிபடுவோரையும் அந் நிலையினராகச் செய்வன். அங்ஙனம் செய்யப்பட்ட அவர் அணுபக்க அயன், மால் முதலியோராவர். சிவன் அவ்வாறு நிற்கின்ற நிலைகள் சம்பு பக்கமாகும். `இம்மந்திரத்திற் கூறப்பட்டவை சம்பு பக்கம்` என்பது உணர்க.
மேற்கூறிய நவந்தரு பேதங்களில் மகேசுரனது பேதங்களாக இருபத்தைந்து வடிவங்களும், மற்றும் பல வடிவங்களும் உள. அவை யெல்லாம் `மாகேசுவர மூர்த்தங்கள்` எனப்பட்டு `மகேசுரன்` என்னும் ஒன்றிலே அடங்குவனவாம். ஆகவே, `மாகேசுர வடிவங்கள் ஒவ் வொன்றும் அவ்வவ் வடிவத்திற்கு மட்டுமே உரிய சிறப்புக் குறிகளாய் அவ்வளவில் மட்டுமே பயன் தருவனவாய் நிற்க, இலிங்க மூர்த்தம் ஒன்றே நவந்தரு பேதங்கட்கும் பொதுக் குறியாய் நின்று எல்லாப் பயன்களையும் தருவது` என்பது இம்மந்திரத்தால் உணர்த்தப் பட்டதாம். எப்பயன் கருதிச் சிவனை வழிபட்டோரும் அவனை இவ்விலிங்கத் திருமேனியிற்றானே வழிபட்டு அவ்வப் பயன்களைப் பெற்றமையைப் புராணங்கள் பலவாக விரித்து கூறும்.
இங்குக் கூறிய அயன், மால் முதலிய பலரும் சம்பு பக்கம் ஆதலால் சிவலிங்கத்தில் `இது பிரம பாகம், இது விட்டுணு பாகம்` என்றாற் போலச் சில இடங்களில் கூறப்படுவதும் சம்பு பக்கத்தை நோக்கியே என்பது உளங்கொளத் தக்கது.
இதனால் சிவலிங்கம் அனைத்து மூர்த்திகளாயும் நிற்கும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage