
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
பதிகங்கள்

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
English Meaning:
Lord Appears in Love EntwinedThe Celestial Beings seek the Lord
Chanting His glory in names thousand;
They that adore His Holy Feet
In abiding rapture of their hearts,
And hold him as the apple of their eyes`
Unto them is He sweet melody,
To them He appears in divine love entwined.
Tamil Meaning:
சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம் மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள் உடையவனாகின்றான்.Special Remark:
தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லிப் போற்றுதலை,``பேரா யிரம் பரவி வானோர் ஏத்தும் - பெம்மானை`` 1
என அப்பரும் எடுத்தோதியருளினார். தேவர்கள் எத்துணைப் பணி வுடையராயினும், `யாம் தேவர்` என்னும் செருக்கு முற்றிலும் நீங்கப் பெறாமையின், அச் செருக்குச் சிறிதும் இல்லாத அடியார்களிடத்தே சிவன் மிக்க கருணையுடையவனாய் இருக்கின்றான் என்பதாம்.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி`` 2
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்`` 3
என்பவனவற்றையும் நோக்குக. `உள்மகிழ்ந்து உன்னுவர்` என மாற்றிக்கொள்க. `தொழவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. தேவ இனத்தராய் அருகணைதல் பற்றி ``உள் நின்று`` என்றார். ``பண்ணவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிறப்பு நிலைத் தாச மார்க்கமும் செருக்கு நீங்கி அன்போடு கூடியவழியே பெரும் பயன் தருவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage