
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
பதிகங்கள்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.
English Meaning:
Samadhi Transcends SiddhisTo those who are in Samadhi
Many the Yogas that come of themselves
And the Siddhis eight that come unsought;
But, Samadhi none is for those who walk with God
Samadhi none is for those who become one in God.
Tamil Meaning:
சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.Special Remark:
``பல யோகம்`` என்றது, மனம் ஒன்றி நின்று செய்யப் படுதல் பற்றி, `மந்திரயோகம், கன்மயோகம், பத்தியோகம்` என வழங் கப்படுவனவற்றை. இடைநின்ற இரண்டடிகளாலும் ஞானம், யோகத் தின் வேறாய் மேம்பட்டு நிற்றல் குறித்தவாறு. இறையுடன் ஏகல், அவன் அருள்வழியே செயற்படல். தான் அவனாதல், ஆன்மா இறை வனது எண்குணங்களையும் பெற்று நிற்றல். இவை இரண்டும் யோகத் தில் எய்தாமை அறிக. ஈற்றடியால் யோகத்தின் இடைநிலைப் பயன் கூறப்பட்டது. `எட்டுச் சித்திகளும் கீழ் உலகம் ஒன்றோடு மேல் உலகம் ஏழினும் அவ்வவ்விடத்திற்கு ஏற்பப் பெறப்படுமாற்றால் அறுபத்து நான்காம்`. இது சிவஞானமாபாடியத்துட் (சூ.2 அதி.2) கண்டது.இதனால், யோகத்தின் எல்லை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage