
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
பதிகங்கள்

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
English Meaning:
The lowly onesCar not for their parents,
They abuse their kith and kin and words foul
Nor do they follow the Guru`s behest
Only those who revere the parents, kith and kin and the Guru
Are in truth blessed, none else indeed.
Tamil Meaning:
கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!Special Remark:
``கற்றிருந்தார்`` என்றது ``கற்று வல்ல சான்றோர்`` என்றவாறு. ``உற்றிருந்தாரவர்`` என்றதில் அவர் பகுதிப் பொருள் விகுதி. ``நல்லன பலவும்`` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.தாய், தந்தை, தமையன்மார் மாதுலன் முதலிய மூத்த உறவினர் இவரெல்லாம் ``குரவர்`` எனப்படுவராகலின், ``அவரை நிந்தித்தல் கூடாது`` என்பதனையும் இவ்வதிகாரத்துள் முதற்கண் வைத்துக் கூறினார். இனி ``கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குரவராதல்`` வெளிப்படை. அவரை, ``கற்றிருந்தார்`` என்பதனுள் அடக்கினார்; அவர்தாம் எழுத்தறிவிப்பவரும், நூற்பொருள் உணர்த்துபவரும், தொழில் கற்பிப்பவரும் முதலாகப் பல திறத்தராதலின்.
இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``ஓரெழுத்தொரு பொருள்`` என்னும் பாடல் முழுவதும் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், அது நாயனார் திருமொழியன்றாம். அதன் பொருளும், ``மந்திரம் ஒன்றை`` என வரும் திருமந்திரத்துட் பெறப்படுகின்றது.
ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage