
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
பதிகங்கள்

ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
English Meaning:
He Dances in Sushumna and in Jnana that Arises in YogaIn Yoga
That like elephant goad subdues the senses,
Is Bodha (Jnana);
There arises in rhythmic cadence
The drum-beat of Thom-Theem;
To that, Sankaran, in accord, dance
Within the central Sushumna Nadi;
When He thus dances, He enters in you,
And there abides, never to leave ever after.
Tamil Meaning:
எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச் செய்தும், பின் அதனை, `அருவம் நான்கு அருஉருவம் ஒன்று, உருவம் நான்கு` என்னும் முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற் றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில் உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும், தோற்றம் நிலை, இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில் முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன் உணர்வைத் தந்து; இறுதியாக, என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம் வரையறை செய்துகொண்டான்.Special Remark:
ஆளத்தியாவது, பண் அமைதற்கு ஏழிசை முறையால் அதனை ஏற்றிழிவு வகைகளில் முன்னர் அமைத்துக் காண்பது. அஃது இங்குச் சுந்தரக் கூத்தினை இயற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலைக் குறித்தது. காலம் - ஊழி; பேரூழி; முற்றழிப்புக் காலம். ``கருத்து`` என்றது அறிவை, ``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் ஆறும் எண்ணுப் பொருளவாய் முறையே `ஆயத்தம், தூலம், சூக்குமம், கேவலம், சகலம், சுத்தம்` என்னும் அறுவகைக் கூத்தினையும் குறித்தன. சிவன் ஆயத்த நிலையில் பரநாத பரவிந்துக்களாயும், தூல நிலையில் அபநாத அபவிந்து சதாசிவன் முதலிய ஐவராயும் நிற்பன் `நவந்தரூ பேதம்` என்னும் மரபில் மலைபு வாராமைப் பொருட்டு. ``நவக்கூத்தாடி`` என ஒன்பது பேதம் கூறினாராயினும், அவற்றுள் முதலில் உள்ள பரநாத பரவிந்துக்கள் ஒழிந்த ஏழனையே அங்குக் கொள்க. இனி `நவக் கூத்தாடி` என்றே போயினால், ஆயத்த நிலை தோன்றாமை பற்றி அதனை வேறு வைத்தும் முற்றழிப்புத் தனிச் சிறப்புடைமையின் அதனைப் பின்னரும் எடுத்தோதியும் வலியுறுத்தினார். சுத்த நிலைக் கூத்து முன் அதிகாரத்திற்குரிய ஆனந்தக் கூத்தேயாயினும் அதுவும் கூத்தினுள் ஒன்றாதல் தோன்றுதற் பொருட்டு, ``முடிவிலா ஞானத்துள் ஆடி`` எனத் தொகுத்தோதினார். ``முடித்தான்`` என்றது, `இவ்வாறு முடித்தான்` என வரையறை செய்தமையைக் குறித்தது. இனிச் சுத்தம் ஒழிந்த கேவல சகலக் கூத்துக்களும் நவக் கூத்தில் அடங்குவனவே என்க. முதல் அடி இன எதுகை.இதனால் சுந்தரக் கூத்தின் வகைகள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன. ஆனந்தக் கூத்தைக் கூறியது எய்தியது இகந்து படாமைக் காத்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage