
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
பதிகங்கள்

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.
English Meaning:
The Five Letters Unwrites Fate`s LettersRipe they hang
The Letters Five
In Vedas ancient;
They know not the Way
To Slumber-in-Waking;
``Letters we know,`` they say
Witless are they;
They know not the Letter
That their Fate`s Letter unwrites.
Tamil Meaning:
பஞ்சாக்கரம் பழமையான வேதமாகிய மரத்தில் அரும்பாய் அரும்பி, போதாய் முதிர்ந்து, பிஞ்சாய் உருப்பட்டு, காயாய்க் காய்த்து, பழமாய்ப் பழுத்து, உண்ண வல்லவர்க்கு இனித்துப் பயன்படுகின்றது. அதனை உண்டு, அல்லல் அறு அமைதியுடன் அறிதுயில் கொள்ளும் பயிற்சியை அறிபவர் உலகில் இல்லை. ஆயினும் பள்ளியில் எழுத்தறி கல்வியை மட்டும் கற்றவரகள் கூட, `இந்த ஐந்தெழுத்துக்களை நாங்கள் அறிவோம்` எனக் கூறுகின்றனர். ஆயினும் வேதம் முதலிய அனைத்தையும் கற்றவர்கள் கூட ஐந்தெழுத்து ஊழை நீக்கும் எழுத்தாதலை அறிய மாட்டார்கள்.Special Remark:
ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல ஆதலை. ``பழுத்தன`` என்னும் குறிப்பால் உணர்த்தினார். அது பற்றியே அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``பழுத்தன`` என்றது குறிப்புருவகம். ``அங்கு`` என்றது, ``விழித்திருக்கும் போதே`` என்றபடி. விழித்தல் அறிவு அறியாமையுட் படாது விளங்கியிருத்தல் உறங்குதல் - உலக வாதனை யின்றியிருத்தல். எனவே, சிவத்தை மறவாது உணர்ந்திருத்தலாயிற்று. இந்நிலை ஆனந்த நிலையாதல் பற்றி, உலகத்தில் உறங்குவார் அல்லல் இன்றி இருத்தலோடு உவமித்து இந்நிலையில் நிற்பவரை, `தூங்குபவர்` என்றும், செயலற்றிருத்தல் பற்றி, ``சோம்பர்`` என்றும் நயம்படக் கூறுவர். ``தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே`` ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``* என்னும் மந்திரங்களைக் காண்க.``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்;மற் றேதுண்டு சொல்``8
என்றார் உமாபதி தேவரும் இதனை, ``தூங்காமல் தூங்குதல்`` என்றும் கூறுவர். ஏதர் - குற்றம் உடையவர். ஏதம் - குற்றம்; அறியாமை. ஈற்றடியின் முதலில் உள்ள எழுத்து ஊழ். அதனை `அயன் எழுத்து` என்றும், `தலையெழுத்து` என்றும் கூறும் வழக்குண்மை யறிக. அழுத்துதல் - அடங்குதல். ஊழ் வினை ஊட்டியல்லது ஒழியாமை பற்றி `ஒழிக்கும்` என்னாது, ``அழுத்தும்`` என்றார். `உயிரைத் தாக்காது உடல் ஊழாய் வந்து போகும்` என்பதாம்.
``திருவாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை
நலிய ஒட்டாரே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டு. திருவைந்தெழுத்தை ஓதுவாரை ஊழ்வினை நலியா என்பதனை,
``பந்தமா னவை யறுத்துப்
பௌதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா தங்குத்
தன்மைபோல் வினையும் சாரும்;
அந்தம்ஆ திகள் இலாத
அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே``*
என்பதனான் அறிக.
``சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை;- உபாயம்
இதுவே; மதிஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்``*
என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. இறுதியில் உள்ள ``எழுத்து`` எழுத்தாம் தன்மை. இசை வல்லுநர்கள், `ச ரி க ம ப த நி` என்னும் எழுத்துக்களைச் சொல்லக் கேட்ட ஒருவன் `இந்த எழுத்துக்களை நான் அறியேனா` என்று சொல்வது போல்வதுதான், `ஐந்தெழுத்துக்களை நாம் அறிவோம்` என்றல் என்றபடி.
இதனால், இதுகாறும் பலவாறாகக் கூறிவந்த அஞ்செழுத்தின் சிறப்பனைத்தும் ஒருவார்த்தையாகத் தொகுத்துணர்த்தி முடிக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage