
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
பதிகங்கள்

ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.
English Meaning:
Mukti is the Goal of Being One With SivaThey know not the goal of birth,
The Jiva who knows it
Will in Grace be;
Nothing here to be in home or outside,
Thus renouncing all,
Be one with Siva
That verily is Mukti.
Tamil Meaning:
[``அறிவுடையார் ஆவ தறிவார்;`` அறிவிலார் - அஃதறிகல்லாதவர்``* என்றபடி, பின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்துணர்பவரே `அறிவுடையார்` எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும், அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே] பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும், உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லை` என்பதை உணர்ந்து, அவனது அருளைப் பெற்று, அந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.Special Remark:
`எனவே, சிவனது அருளைப் பெற்றோர் முத்தியாகிய இன்பத்தை அடைவர்` என்பதாம். `பிற` என்னும் முதனிலையே, `பிறப்பு` எனத் தொழிற் பெயர்ப் பொருளைத் தந்தமையின் முதனிலைத் தொழிற்பெயர்.``ஞானத்தால் வீடு ... ... ... அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம்``*
என்பார், ``ஆவதறியா உயிர் பிறப்பால் உறும் - ஆவதறியும் உயிர் அருட்பால் உறும்`` என்றார். அகன்று அகமாகிய உடம்பையும், புறமாகிய உலகத்தையும் அடிநிலைக்காரணமாக உணர்தலினின்றும் நீங்கி, ஓவு சிவன் - எல்லாவற்றையும் கடந்தவனாகிய சிவன்.
இதனால், முத்திகளின் பொது இலக்கணம் கூறப்பட்டது. இதனானே, `சித்தாந்த முத்தி இது` என்பதும், `ஏனைச் சமயவாதிகள் பிற பிறவாகக் கூறும் முத்திகள் எல்லாம் பூர்வ பக்க முத்திகளே` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அவர் கூறும் முத்தி வகைகளைச் சிவஞானசித்தி* சிவப்பிராகச* நூல்களிற் காண்க. முத்தியை இலக்கண வகையால் தெரிந்துணர்த்துபவர் `அதனை அடைதல் ஞானம் ஒன்றானேயாம்` என்பதும் உடன் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage