
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 29. சீவன்
பதிகங்கள்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.
English Meaning:
Size of SoulTo speak of the size of Jiva
It is like this;
Split a cow`s hair soft
Into a hundred tiny parts;
And each part into a thousand parts divide;
The size of Jiva is that one of part
Of the one hundred thousand.
Tamil Meaning:
உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.Special Remark:
இது, ``வன்பாற்கண் - வற்றல் மரம் தறித்தற்று`` * என்பது போல, வடிவு கூறலாகாமையைக் குறித்து நின்றது. `வடிவு` என்பது அகல நீள கனங்களையுடையதாகும். அது கண்ணில்லா தவராலும் தடவி அறிந்து கொள்ளப்படும். `உருவம்` என்பது நிறம். அது கண்ணாலன்றி அறிய இயலாது. எனவே, உயிர்க்கு `அணு` முதலாக வடிவு கூறுவோர் உயிரை, `பருப் பொருள்`, அஃதாவது, `தூலப் பொருள்` என்போராவர். உயிர் பருப்பொருளாகாது `நுண் பொருள்`, அஃதாவது, `சூக்குமப் பொருள்` என்றற்கே இவ்வாறு கூறினார். `பிராணன்` என்றல், உபாதி பற்றிய செயற்கையாலாம். தத்துவங்கள் யாவும் உபாதியேயாகலின், உயிரை மேல், `புருடன்` முதலாகக் கூறியதும் உபாதி பற்றியேயாம். மேவிய கூறு - கிடைத்த ஒரு கூறு ``ஆயினால்`` என்பதன் பின், `அதில்` என்பது வருவித்து `அதில் நூறாயிரத்தொன்றே ஆவியின் கூறு` என்க.இதனால், `உயிர், உண்மையில் சூக்குமப் பொருளே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage