
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
பதிகங்கள்

கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
English Meaning:
Sivaditya is Immanent and TranscendentIn pot to pot the sun appears,
Well may you the pots close,
Yet in them you contain him not;
So, too, when Lord that poison swallowed
This body enters,
There can you contain Him not
He pervades all.
Tamil Meaning:
நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.Special Remark:
`அஃதாவது, `சிவன், அவனை உணரும் பக்குவம் வாய்ந்த உயிர்களினுள்ளே விளங்குதல்லது, அவனை உணரமாட்டாது மூடமாய்க் கிடக்கின்ற அபக்குவமான உயிரினுள்ளே விளங்கான்` என்பதாம்.ஆதித்தனது கதிரில் இருதன்மைகள் உள்ளன. ஒன்று வெம்மை; மற்றொன்று ஒண்மை. அதுபோல, சிவனது சத்தியிலும் இரு தன்மைகள் உள்ளன. ஒன்று மறைத்தல்; மற்றொன்று விளக்கல், இத்தன்மை பற்றி, சத்தி இரண்டாகச் சொல்லப்படும். ஒன்று திரோதான சத்தி; மற்றொன்று அருட்சத்தி. மூடி வைக்கப்பட்ட குடத்து நீரிலும் ஆதித்தனது வெம்மைச் சத்தி விளங்குவதேயாகும். ஆயினும் அந்நீரில் ஆதித்தனது ஒளிச்சத்தி விளங்காது. அதுபோலவே எல்லா உயிர்களிடத்தும் சிவனது திரோதான சத்தி விளங்கவே செய்யும், ஆயினும் அருட் சத்தி பக்குவம் வாய்ந்த உயிர்களில் மட்டுமே விளங்கும் என உணர்க.
இங்குக் கூறிய உவமையால் குடத்து நீருள் ஆதித்தன் தோன்றும்பொழுது அந்த ஆதித்தனுக்கும், வானத்தில் உள்ள ஆதித் தனுக்கும் இடையே தன்மை வேற்றுமை யாதும் இன்மையும், மூடி வைக்கப்பட்ட குடத்து நீருள் ஆதித்தன் சிறிதும் தோன்றாமையும் பெறப்படுதலால், பல வகையில் வேறுபட்ட தன்மையை உடைய உயிர்களையும் `சிவனது கூறுகளே; அல்லது சிவனது பிரதி பிம்பங்களே` என்பாரது கூற்றுப் பொருந்தாமையும் இங்குக் குறிக்கப் பட்டதாம். அடுக்குப் பன்மை தோற்றி நின்றது.
இதனால், சிவாதித்தன் ஞானாதித்தனுள்ளே விளங்குதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage