
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
பதிகங்கள்

உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.
English Meaning:
Desire for Births persistsTired they are not;
Still they want to live
In this fleshy body,
Of earth, water and other matter made;
They seek not to adore Lord
Whom the Elements Five
Together in prayer beseech.
Tamil Meaning:
உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.Special Remark:
முதலடியை இறுதியிற் கூட்டி, `பின்னும் உலந்திலிர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உலந்திலிர்`` எனப் பின் வருவதனால், ``உலந்த பின்னும்`` என்பது பெறப்பட்டது. `என்றும்` என்பது, ஆற்றலால் வந்தியைந்தது.`உடம்பையே இலிங்கமாக வைத்து வழிபடப் புகும்பொழுது உடம்பை மாசு போக மண்ணாற் கழுவிக் குளித்தல் தவறாமற் செய்யத் தக்கது` என்பது உணர்த்துதற்கு அதனை எடுத்தோதினார், `ஊன்நவை நிலந்தரு நீர் தெளி செய்ய` என்க. பூதங்கள் ஐந்திலும் தனித் தனியே இறைவனை எண்ணி வழிபடுதல் உண்டு ஆகலின், ``அவை ஐந்தும் ஒன்றாக வந்தி செய்யீர்`` என்றது, `அவை ஒருங்கு கூடி ஒன்றாய்ப் பரிணமித்த உடம்பிலே அவனை எண்ணி வழிபடுக` என்றதாயிற்று, வலம் - வெற்றி. சிவன் தன்னை வழிபடுபவர்க்கு வெற்றியைத் தருதலாவது, அவர் நினைத்தவற்றை நினைத்தவாறே கைகூடச் செய்தல். இதனால், இவ்வழிபாட்டின் இடைநிலைப் பயனாகச் சிலவற்றைப் பெறுதல் குறிக்கப்பட்டது. `பிற பயன்கள் இடைநிலையாகக் கிடைப்பினும் முடிநிலைப் பயனாகிய வீடுபேறு உளதாம்` என்பது முதலடியில் கூறப்பட்டது. இறந்த பின்னும் இறந்தவர் ஆகாமையாவது, மீளப் பிறவாமை. என்னை? இறந்தவர் பிறத்தல் ஒருதலையாகலின்.
இதனால் பிண்டலிங்க வழிபாடு எல்லாப் பயனையும் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage