
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
பதிகங்கள்

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.
English Meaning:
School of Suddha-SaivamThose who tread the path of Suddha Saivam
Stand aloft,
Their hearts intent on Eternal Para;
Transcending Worlds of Pure and Impure Maya,
Where Pure Intelligence consorts not with Base Ignorance,
And the lines that divide Real, Unreal and Real-Unreal
Are discerned sharp.
Tamil Meaning:
சுத்த சைவர்க்கு, சத்தாகிய பதியின் இயல்பையும், அசத்தாகிய பாசத்தின் இயல்பையும், இவற்றிற்கு இடைப்பட்டுச் சதசத்தாய் நிற்கின்ற பசுவின் இயல்பையும் உணர்ந்தபின், அறிவுடைப் பொருளாகிய உயிர்களுள்ளும், அறிவில் பொருளாகிய பாசங்களுள் ஒன்றாகாது வேறுபட்ட பொருளாய், சுத்தமாயுள்ள வைந்தவங்க ளிலும் அசுத்தமாயுள்ள மாயேயங்களிலும் தோய்ந்தும் தோயாமலி ருக்கின்ற நித்தியப் பொருளாகிய பரசிவம் ஒன்றே குறிப் பொருளாம்.Special Remark:
எனவே, தத்துவ ஞானத்தை விரும்புவது `சுத்த சைவம்` என்றதாம். ஆகவே, சிவஞான பாடியம் முதலியவற்றில் `சுத்த சைவம்` என்னும் பெயராற் குறிக்கப்படும் சுத்த சைவம் அன்று இது என்பது விளங்கும்.சத்து - மாற்றமின்றி என்றும் ஒரு படித்தாய் இருப்பது. அசத்து - மாற்றத்தை உடையது, சதசத்து - இவ்விரண்டில் எதனோடும் சார்தற்கு உரியதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது. ``சத்து`` முதலிய ஐந்தும் ஆகுபெயராய் முன்னர் அத்தன்மையுடைய பொருளையுணர்த்திப் பின் அவற்றது இயல்பை உணர்த்தின. `கண்டபின்` என்பது `கண்டு` எனத் திரிந்தது. ``நீத்த, நின்ற`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``பரம்`` என்னும் ஒரு பெயர் கொண்டன, அச்சித்தும், நின்று` என்பன பாடமல்ல. ``சுத்தம், அசுத்தம்`` என்பன அவற்றையுடைய பொருள்களைக் குறித்தன. வைந்தவம் - விந்துவின் காரியம். விந்து - சுத்தமாயை, மாயேயம் - மாயையின் காரியம், மாயை - அசுத்த மாயை, `நித்தப் பரம்` என்பது தொடைநோக்கி மெலிந்து நின்றது. `ஞேயம்` என்பது `நேயம்` என மருவிற்று. `அறியப்படுபொருள்` என்பது இதன் பொருள்.
இதனால், நால்வகைச் சைவத்துள் `சுத்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage