
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
பதிகங்கள்

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே.
English Meaning:
Effect of Urine Therapy in YogaThe urinary liquid within the body
Is unto a picot of small well;
Dipped into sea vast
If that is fed once a day
In way appropriate,
Life will know distress none;
Well may you seek it.
Tamil Meaning:
உடம்பில் இயல்பிலே பொருந்தியுள்ள ஆற்றல் மிக்க, குடிக்கத் தகும் நீர், கடலில் சிறிய கிணற்றுக்கு இடப்படும் ஏற்றத்தை இட்டு இறைத்துக் கொள்ளுதலோடு ஒத்திருக்கும். (அஃதாவது, ``மிகுதியாய் வெளிப் போகும் சிறுநீரில் சிறிதளவு உளதாகும்`` என்பதாம்) அதனை உடலினின்று வெளிப்போதும் முன்பே வேறொரு வழியால் அவ்வுடலுக்கே ஆகுமாறு பாய்ச்சினால், உயிர் துன்பப் படாது நெடுங்காலம் நிற்கும்படி நிறுத்துதல் கூடும்.Special Remark:
``அமுரி`` என்றாயினும், ``நீர்`` என்றாயினும் ஒரு பெயர்ச் சொல்லால் ஓதின், ``அது சிறுநீரே போலும்`` என மலைய வரினும் வரும் என்னும் கருத்தால், அங்ஙனம் மலையாமைப் பொருட்டு, ``உறுதிக் குடி நீர்`` எனத் தொடர்மொழியால் பொருள் இனிது விளங்க ஓதினார். சிறுநீர் தீப்பொருளாய்க் கழிக்கப்படுவது ஆதலின், அஃது உறுதியைத் தருவதாய்க் குடிக்கத் தக்கதாகாமை வெளிப்படை.``உடலில் இறைக்கில்`` என்றது, ``உடலினுள் இருக்கும் பொழுதே இறைத்தால்`` என்றவாறு. வேறொரு வழி, சுழுமுனைத் தண்டு; உடலில் உள்ள பல நாடிகளும் இதனைச் சுற்றிக்கிடத்தலால், அவற்றின்வழி அமுரியைப் பிராண இயக்கத்தால் உடல் எங்கும் செல்லுமாறு பாய்ச்சுதல் கூடும் என்க. யோக முயற்சி இல்லாதார்க்குப் பிராணன் அபானனாதல் பெரும்பான்மையாய்க் கீழ்ப்போய் ஒழிய, யோக முயற்சி உடையார்க்கு அஃது அவ்வாறாகாமல் சுழுமுனைவழிச் சென்று உடற்குப் பயன் தருதல்போல, அமுரியும் பிறர்க்குச் சிறுநீரோடு ஒன்றாய் வெளிப்போந்து ஒழிய, யோகியர்க்கு அவ்வாறாகாமல் உடற்கண் சென்று பயன்படுவதாம். அதனை அங்ஙனம் பயன்படச் செய்யும் முறையையே, ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றார். ஒன்று - ஒன்றாய் நிற்கும் உடல். நடலை - துன்பம். ``உயிர் நாட்டலும் ஆம்`` என்றது, அமுரியின் பயன் கூறும் முகத்தால் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு.
இதனால், ``அமுரியாவது இது`` என்பதும், அதனைத் தரிக்கும் முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage