
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
பதிகங்கள்

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.
English Meaning:
Yogi Who Regulates Breath Will See Finite LightThe Prana runs helter-skelter
To Right and to Left;
If Yogi gathers it proper
And regulates to reach Kundalini,
He shall stand before the Infinite Light;
Thus He said, Nandi Holy.
Tamil Meaning:
சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.Special Remark:
அந்தணன் - முனிவன்; யோகி. கூடுதல் - அடைதல்; ``கூடியிடுகின்ற`` என்பது ஒருசொல். பணி - பாம்பு; குண்டலினி. தீபத்தின் - தீபத்தைப்போல. இதன்பின், திரோதான சத்தியைக் குறிக்கின்ற. `ஒன்று` என்னும் சொல் எஞ்சி நின்றது. முன் - முன்பே. `என்பான்` என எதிர்காலத்தால் கூறற்பாலதனை, துணிவு பற்றி ``என்றான்`` என இறந்த காலத்தாற் கூறினார். `யோக முறையால் குண்டலினி சத்தியை உணரப் பெற்றவன், அதனால் திரோதான சத்தி உண்மையை இனிது உணர்வான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட பொருள். `உலகர்க்கு விளக்குப்போல நிற்கின்ற திரோதான சத்தி, யோகத்தில் ஞானத்தை எய்தினோர்க்கு அருட் சத்தியாய் மாறும் நிலையை அடையும்` என்றற்கு அணைகின்ற விளக்கை உவமையாகக் கூறினார். அதனானே, அஃது இனிது காட்சிப்படுதலும் பெறப்பட்டது.இதனால், யோகப்பயிற்சி சத்திநிபாதத்திற்கு ஏதுவாதல் கூறும் முகத்தால், `அப்பயிற்சியை மேற்கொள்ளுதலே சரவோட்டத் தின் இயல்புணர்தற்குப் பயன்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage