
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
பதிகங்கள்

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
English Meaning:
Changing Rhythm on Sundays and Mondays in Alternate FortnightsIf on a Sunday in a fortnight
The breath runs high on the right nostril,
In the fortnight next it runs high on the left;
If on a Monday in a fortnight
The breath runs high on the left nostril
In the fortnight next it runs low on the right;
Thus do they alternate from fortnight to fortnight
If this rhythm thus obtains,
Prana its strength derives;
Know well this
And accordingly regulate breathing.
Tamil Meaning:
இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடி வின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கே யன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.Special Remark:
`மதி வெய்யவன் இரு பால் மாறி வரும்; அவை இடை பிங்கலையிடை ஏறி இழியும்` என்க. முதல் அடியால், `மதி, வெய்யவன்` என்பன பொருள் வேறாதலைக் குறியாது, ஒருபொருள் தானே இடம் பற்றிப்பெறும் நிலை வேறுபாட்டினையே குறிக்கும் என்பது உணர்த்தியவாறு. இரண்டாம் அடி, அஃது அவ்வப்பெயர் பெறுங் காலத்தை உணர்த்திற்று. பால் - இடமும், வலமும் ஆகிய பக்கங்கள். `இரு பாற்கண்` என உருபு விரிக்க. மாறுதல் - வேறிடம் செல்லுதல். வருதல் - முன்னையிடத்திற்கு மீளுதல். `இருபாற்கண் வரும்` என இயையும். எனவே, ஏழாவது இறுதிக்கண் தொக்கதாம். மதியும், வெய்யவனும் ஆகுபெயர்கள்.``உயிர்`` இரண்டனுள் முன்னது பிராணன்; பின்னது ஆன்மா. ``நடுவே`` என்பதன் பின், `இயங்கின்` என்பதும், `உக்கிரம்` என்பதன்பின் `ஆம்` என்பதும் எஞ்சி நின்றன. `இதனைத் தேறி` என எடுத்துக்கொண்டு, `அறிமின்` என்பதற்கு, `நடுவே இயங்குதற்குரிய வழியை` என்னும் செயப்படுபொருள் வருவித்து முடிக்க. `குருமுகமாக` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
இதனால், சரவோட்டம் இரு நிலையது ஆமாறும், பின்னும் அதுதானே பிராணாயாமமாய்ப் பயன் தருமாறும், அப்பயனை எய்துமாறும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage