
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
பதிகங்கள்

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே.
English Meaning:
Treasure Guru`s Guidance for YogaAs through breath you pierce the adharas
You shall vision clear;
Prana leaving the Kundalini Sakti
On its upward journey through Sushumna;
That you gain through the Guru guiding;
Take that as treasure precious gained.
Tamil Meaning:
`சிவன், உடலைக் காக்கின்ற சத்தியினின்றும் பிரிகின்ற நாள் இது` என்பதைக் குறிகள் சிலவற்றால் ஐயமற உணரலாகும். `அக் குறிகள் இவை` என்பதை யோக குருவை வழிபட்டே பெற்று, அங்ஙனம் பெற்ற அறிவைப் பெரிய செல்வம் போல மதித்துப் போற்றிக்கொள்ளுங்கள்.Special Remark:
காக்கும் சத்தியை, ``ஆரணி`` என்பர். சிவன் காக்கும் சத்தியினின்றும் பிரிதலாவது. `நிலை பெறுக என நினைக்கும் நினைவைவிட்டொழிதல். அங்ஙனம் ஒழியின் உடல் ஒரு நொடியும் நிலைபெறாது அழியும். இதனையே,``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்,
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே``
-தி.5 ப.90 பா.4
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசர். எனவே, ``நாதனும், நாயகி தன்னிற் பிரியும் நாள்`` என்றது, `உடல் அழியும் நாள்` என்றவாறாம். ஞான குரு, சாத்திய குருவாகலின், யோக குருவை, ``சாதனகுரு`` என்றார். எனவே, கிரியா குருவும் அத்தன்மையரே யாதல் அறியப்படும். இனி, `நாதன், உடம்பினை உடையதாகிய உயிர்; நாயகி குண்டலினி சத்தி` எனவும் உரைப்பர்.
இதனால், பிராணாயாமத்தில் உளஞ்செல்லுதற் பொருட்டு, வாழ்நாளின் எல்லையை உணருமாறு கூறி, பின் வருகின்ற ஆயுள் பரீட்சைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage