
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
பதிகங்கள்

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.
English Meaning:
Stages of Prana`s Ascending CourseThe breath has stages three
As Prana it courses upward
In single stream through spinal nadi;
And then spreads into cranial space
For the lotus there to blossom
And finally merges into the Divine Flame there.
Tamil Meaning:
மேல், ``வேதகமாக விளைந்து கிடக்கும்`` எனப் பட்ட அச்சாதனைதான், மிகத் தருகின்ற பயன் மூன்றாகும். இனி, இயல்பாக இயங்கும் பிராண வாயுவின்வழி எப்பொழுதும் புறத்தே ஓடிய உணர்வுதானே, சாதனையால் சுழுமுனைவழிச் செலுத்தப்பட்ட வாயுவின்வழியே உள்நோக்கிப் படர்ந்து, பின்னும் உச்சிக் கண்ணதாகிய பெரிய தாமரை மலரிடத்து அவ்வாயுவின் வழியே படிமுறையாற் புக, அவ்விடத்து நன்கு விளங்கும் பேரொளியாகிய திருவருள், முன்பு கீழுள்ள ஆதாரங்களினின்று அவ்வுணர்விற்கு விடயமாய்த் தொடர்ந்து விளங்கிவருவதாம்.Special Remark:
பயன் மூன்றாவன புலன்களின்மேற் சென்ற அவா அறுதலும், திருவருள் தோற்றமும், திருவருட் பேறுமாம். இவை, மேல், (பா.700)`` ஒளிபெற`` என்றதனானே, `பொழுது புலர்தல், செவ்வொளி தோன்றல், ஞாயிற்றைக் காண்டல்` என்பவற்றில் வைத்து அறியக் கிடத்தலின், இவற்றைக் கிளந்தோதாது போயினார். திருவருட் பேறு, படிமுறையானன்றி முதற்கண்ணே முற்றக் கிடையாமையைப் பயன் வகையாலும் உணர்த்துதற்கு, `கிளர் பயன் மூன்று`` என்றார். ``கிளர் பயன்`` என்பது, `கிளர்த்தும் பயன்` என, பிறவினை வினைத்தொகை. `தான்` என்னும் அசை நிலை நான்கிடத்தும் பிரிநிலை ஏகாரத்தோடு வந்தது. `அச்சோதி தானே, உள்நின்று தொடர்ந்தது` என்க. `தொடர்ந்தது தானேயாம்` என்பதில், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. எனவே, ``தொடர்ந்தது`` என்றது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவ்விடத்து நிற்கும் சோதி` எனற் பாலதனை, ``அச் சோதி`` என்றார்.இதனால், மேற்கூறிய சாதனை, வேதகமாக விளையும் முறை விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage