
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
பதிகங்கள்

பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.
English Meaning:
Bhadra, Gomukha, Padma and Simha,Sothira, Veera, and Sukha
These seven along with eminent svastika
Constitute the eight, Eighty and hundred, however,
Are asanas in all reckoned.
Tamil Meaning:
`பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.Special Remark:
`அவற்றுள் மிகச் சிறப்புடைய எட்டு ஆதனங்களையே யான் கூறினேன்` என்றவாறு. எனவே, இவையே சிவயோகத்திற்கு அமையும் என்பதும் `வேண்டுழிச் சிறுபான்மை பிறவும் கொள்ளத் தகும்` என்பதும் பெறப்பட்டன. சொல்லப்பட்ட ஆதனங்களுள் குக்குடாதனத்தை இங்குக் கூறாது, சொல்லப்படாத `திரம்` என்பதனைக் கூறியவாற்றால் `திராசனம்` என்பது குக்குடாதனமே யாதல் பெறுதும்.இங்கு எடுத்துச் சொல்லப்படாத ஆதனங்களுள் சிறப்பு உடையன சில வருமாறு:-
மச்சம், (மீன்) கூர்மம், (ஆமை) மகரம், (முதலை) தனுசு, (வில்) பச்சிமோத்தானம், (பின்பாகம் மேல் எழுதல்) மயூரம், (மயில்) மண்டூகம், (தவளை) மற்கடம், (குரங்கு) ஏகபாதம், (ஒற்றைக்கால்) சிரசு, (தலை) அலம், (கலப்பை) நௌகம், (ஓடம்) சருவாங்கம், (முழுதுடல்) சவம் (பிணம்) முதலியன. மற்றும் இவற்றைப் பலவாகச் சிறிது சிறிது வேறுபடுத்துக் காட்டுவர்; அவற்றின் இயல்புகளை எல்லாம் இங்கு விரிக்கிற் பெருகும். வேண்டுவோர் அடயோக தீபிகை, பதஞ்சலி சூத்திரம் முதலிய யோக நூல்களுள்ளும், சில உபநிடதங்களினும் கண்டுகொள்க.
முது ஆதனம் - முன்னே சொல்லப்பட்ட ஆதனம்; சுவத்திகாதனம். `முது ஆதனத்தோடு எட்டு` என உருபு விரித்து முடிக்க. இனி, `எட்டு, எட்டு, பத்து, நூறு` எனக் கூறப்பட்ட தொகை களை ஒருங்கு கூட்டி, ஆதனங்கள் `நூற்றிருபத்தாறு` என வரையறை காண்பாரும் உளர்.
``நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தல்என்
றொத்த நான்கின் ஒல்கா நிலையோ
டின்பம் பயக்கும் சமய முதலிய
அந்தமில் சிறப்பின் ஆதன மாகும்``
என நச்சினார்க்கினியரும் ஆதனங்களை வரையறாதே கூறினார். அவர் இதனுள் நடத்தலைக் கூறியதும், `சமயம்` என்றதும் அறியத் தக்கன.
இதனால், ஆதனங்கட்குப் புறனடை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage