
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
பதிகங்கள்

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
English Meaning:
Yama, Niyama, and Asana numberlessPranayama wholesome and Pratyahara alike,
Dharana, Dhyana and Samadhi to triumph
—These eight are the steely limbs of Yoga.
Tamil Meaning:
அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.Special Remark:
``எண்ணிலா ஆதனம்`` என்றதனால், `ஆதனங்கள் பல` என்பதும், ``நயமுறும் பிரணாயாமம்`` என்றதனால், `பிரணா யாமமே மனத்தின் அலமரலாகிய இன்பத்தைத் தரும்` என்பதும், ``சய மிகு தாரணை`` என்றதனால், `தாரணை கைவரப் பெற்றவரே மனத்தை அடக்குதலில் வெற்றிபெற்றவராவர்` என்பதும் பெறப்படும். நயம் - இன்பம். சயம் - வெற்றி. அயம் -குதிரை. அயம்உறும் - குதிரை அடங்கப்பெறுகின்ற. ``குதிரை`` என்பது, உவம ஆகுபெயராய் வேகம் மிக்க மனத்தைக் குறித்தல் யோகநூல் வழக்கு. குதிரைக்கு வடமொழி யில் ``வாசி`` என்பது பெயராகையால் அஃது அடங்குதற் பொருட்டுச் செய்யப்படும் யோகம் ``வாசி யோகம்`` எனப்படுகின்றது.இதனால், யோகத்தின் எண்வகை உறுப்புக்களும் தொகுத்து உணர்த்தப்பட்டன. இவை எட்டும் இங்குக் கூறிய முறையானே முதற் படி, இரண்டாம்படி முதலியவாய் அமையும் என்பது உணர்ந்து கொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage