
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
பதிகங்கள்

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
English Meaning:
Let them beware who transplantA Linga at a Shirne established;
Even before the transplant is completed,
The Kingdom will to disaster fall;
And foul leprosy will torture him
Thus did He declare,
Nandi, the Divine Protector.
Tamil Meaning:
ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.Special Remark:
எனவே, `அரசன் தனது நாட்டில் இச்செயல் எங்கும் நிகழாதவாறு காத்தல் வேண்டும்` எனவும், `அரசன் அறியாதவாறு இச்செயலை முடித்துவிட ஒருவரும் எண்ணலாகாது` எனவும் கூறியவாறாம். `இலிங்கம் இல்லாத கோயிலின் நலம் கருதி இலிங்கம் உள்ள கோயிலைப் பாழாக்கிவிடுதல் கூடாது` என்பதும், ஒரு கோயிலில் உள்ள இலிங்கம் எப்பொழுது யாரால் நிறுவப்பெற்றதோ அதனை அவர்களது கருத்திற்கு மாறாகப் பெயர்த்துக்கொண்டுபோய் வேறிடத்தில் வைத்தல் கூடாது என்பதும் கருத்து. `சிறந்து விளங்கும் கோயிலில் உள்ள இலிங்கத்தைக் கொண்டுபோய்ப் புதிய கோயிலில் நிறுவினால் அக்கோயிலுக்குச் சிறப்பு உண்டாகும்; இதனால் குற்றமில்லை` என்று எண்ணும் சிலரது அறியாமையைப் போக்குதற் பொருட்டு இத்திருமந்திரத்தை அருளிச்செய்தார். இதனானே, ஒரு கோயிலில் முன்பு உள்ள மூர்த்தியைத் தக்க காரணம் இல்லாமல் நீக்கி வேறொரு மூர்த்தியை நிறுவுதலும் குற்றம் என்பது பெறப்பட்டது.இதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்திக்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage