ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம் 

பதிகங்கள்

Photo

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 

English Meaning:
You may give away wealth
As massive as a mountain;
Yet if you give it
To those that adore not our Lord;
You shall with them reach
The Seventh Hell of ineffable pain.
Tamil Meaning:
`தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.
Special Remark:
``அத்தனை`` என்றதனை, `மண்` என்றதற்கும் கொள்க. `இறைஞ்சாதார்க்கு ஈயினும்` என மேலே கூட்டுக. தானம் வாங்கு வோர் அதனைத் தமக்கு உரியதாக நினையாது சிவனுடையதாக நினைந்து, `சிவனுக்கு ஆகுக` (சிவார்ப்பணமஸ்து) எனக் கூறியே ஏற்றல் வேண்டும். அவ்வாறு ஏலாதார் சிவனது பொருளைக் கவர்ந்த சிவத் துரோகிகளாவர். அதனால், `அவரும், அவருக்குக் கொடுத் தோரும் நரகுறுவர்` என்றார். தானம் வாங்காது தம் பொருளை நுகர்வோரும் அங்ஙனமே நினைத்தல் வேண்டுமாயினும், அவர், `அங்ஙனம் நினைக்கும் உயர்ந்தோர்` எனத் தம்மைக் கூறிக் கொள்ளாமையின் அவர்க்கும், அவரொடு பழகுவோர்க்கும் பெருங் குற்றம் இல்லை`. தானம் வாங்குவோர் அத்தன்மையுடைய உயர்ந் தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, தானம் செய்வாரை வஞ்சித்தலின் குற்றமுடையராகின்றனர். இதனை உட்கொண்டே திருவள்ளுவரும்,
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
- குறள் - 276
என்றார். இனிக் கொடுப்பாரும் அவ்வாறே சிவனை நினைந்து, ஏற்போரைச் சிவனாகவும், பொருளைச் சிவனுடையதாகவும் கருதி `சிவனுக்கு ஆகுக` என்று சொல்லிலே கொடுத்தல் வேண்டுமாதலின் ``இருவரும்`` என்றார். ``ஈந்த`` என்னும் பெயரெச்சம் வினைமுதற் பொருண்மையும், கோடற் பொருண்மையுமாக இருநிலைமை எய்திநின்றது.
இதனால், மேல், ``பெரும்பிழை`` எனப்பட்ட, அசற் பாத்திரத்தில் இடும் குற்றத்தால் விளையும் துன்பம் கூறப்பட்டது.