
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
பதிகங்கள்

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.
English Meaning:
Well may you tender her;And with fresh grass feed her,
The barren cow can no milk give;
Even so is giving
Unto those who neither good nor holy are;
Unto a crop they are,
Raised in season improper.
Tamil Meaning:
சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.Special Remark:
பசுவினது வறட்டுத் தன்மையை அறிதலினும், காலத்தை அறிதல் அரிதாதல் பற்றி, உயர்ந்தோரை அறிதலின் அருமையை விளக்கப் பின்னும் அவ்வுவமையைக் கூறினார். இரண்டு உவமைகளானும் `உயர்ந்தோர் எய்தியவழி இகழ்ந்திராது ஏற்று வழிபட்டுத் தானம் செய்க` என்பதும் பெற்றாம். ``குனிந்து`` என்பது பொருளினும் சென்று இயையும். ``ஈந்தது`` என்றே போயினா ராயினும், `ஈந்து பயன்பெற நினைப்பது` என்பது உவமையால் விளங்கும். `அது பயிரும் ஆகும்` என்க. உம்மை, தொகுத்தல்.இதனால், அசற்பாத்திரத்தில் செய்த தானம் பயன்படாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage