
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
பதிகங்கள்

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.
English Meaning:
Give only unto thoseWho follow the way Yoga, Yama, and Niyama,
And who adore Lord, in constancy abiding;
To give those who have no love for God,
A heinous crime, indeed it is.
Tamil Meaning:
பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.Special Remark:
``ஈவது`` முதலிய நான்கும் தொழிற்பெயர்கள். `தவிர்வன செய்வன` என்னாது ``யோக இயம நியமங்கள்`` என்றார், `அறநெறியளவில் நில்லாது, கடவுள் நெறியினும் சென்றவராதல் வேண்டும்` என்றற்கு. `அன்பால் தங்கும்` என உருபு விரிக்க. பின்னர் வந்த, ``அறிந்து`` என்னும் எச்சம் ``தங்காதவர்`` என்பதன் எதிர் மறையோடு முடிந்தது. இத்தொடர், `அந்நிலையில் நில்லாதவர்` என்னும் சுட்டளவாய் நின்றது, `அவர்க்கே` என்னும் ஏகாரம் தொகுத் தலாயிற்று. ``அன்றி`` என்பது முதலியவற்றை வேறு தொடராக்குக. `தகாதார்க்குக் கொடுக்கப்படும் பொருள் தீய வழியிற் சென்று பலர்க்கும் தீங்கு விளைக்குமாகலின், அக்குற்றம் பொருளை ஈந்தாரையே முன்னர்ச் சாரும்` என்பது கருத்து.அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த்
தடங்கடல் நடுவுள் தீவு பலஉள அவற்றுள் தோன்றி
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வார்
மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்ன ரேறே.
-சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம் , 27
என்றதும் காண்க.
இதனால், அசற்பாத்திரத்தில் இட்ட தானம் பயன்படா தொழிதன் மேலும், துன்பம் பயக்கும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage