ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

பதிகங்கள்

Photo

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

English Meaning:
Those that are destined to be
Let them be;
Those that are destined not to be
Let them not be;
Those that are destined to go
Let them go;
Those that are destined to come
Let them Come;
The Mighty Nandi shows all
And witnesses all;
All things appropriate,
He does
To those of tender love for Him.
Tamil Meaning:
விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.
Special Remark:
`அவனும் சற்பாத்திரனே` என்பது குறிப்பெச்சம். காவலன் - அரசன்; முதல்வன். `கண்டு, அவன் ஏவின செய்யும்` என்க. இழை - நூல். ``இலங்குநூல்`` (குறள், 410) என்றார் திருவள்ளுவரும். `இளங் கிளையோன்` எனப் பாடம் ஓதி, `புத்தடியான்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். சிவன் காட்டிற்றையே கண்டு அவன் ஆணைவ ழியே நிற்றல் புத்தடியாற்குக் கூடாமை அறிக. அன்றியும் இத்திரு மந்திரம் பின்னர் ஓரிடத்தில் உள்ளவாற்றையும் நோக்குக.
இதனால், சற்பாத்திரராய சிவஞானியருள் நூனெறியாளரது சிறப்புக் கூறப்பட்டது.