ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

பதிகங்கள்

Photo

திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 

English Meaning:
Give a wee bit to Sivajnani
You shall attain Siddhi, Mukti and heavenly bliss;
Give a world of gold to the witless,
You shall become poor losing all joys.
Tamil Meaning:
கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபர முத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.
Special Remark:
சிவஞானியர்க்குச் செய்யப்படுவதைச் சிவன் தனக்குச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுதலால், அது பெரும்பயன் தரவல்ல தாகின்றது. யாதும் அறியாதார்க்கு ஈவது வஞ்சரை வளர்க்கும் செய்கையாய் முடிவதால், அது, கருதிய பயன் தாராமையே யன்றிக் கெடுதற்கும் ஏதுவாம் என்க.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
- குறள், 87
எனவும்,
``தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்`` -நாலடியார், 38
எனவும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலின் சிறப்பு இவ்வாறே யாண்டும் எடுத்தோதப்படுதல் அறிக.
ஈண்டுக் கூறுவன தற்போதம் இறவாத நூனெறி பற்றியனவும், ``எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி`` (தி.6 ப.1பா.3) என்றற்றொடக்கத்தன தற்போதம் இறந்த பத்திநெறி பற்றியனவும் ஆகலான், இவை தம்முள் முரணா என்க.
ஈதல், இங்கு, `கொடுத்தல்` என்னும் பொருளது. அறங்கருதித் தாழ்ந்தோர்க்கு அவர் வந்து இரந்தவழி ஈதல் ஈகையாகும். குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக்கொடுத்தல் கொடையாகும். இவற்றுள் கொடை செய்யும்வழிக் கொள்பவரையே, `பாத்திரம்` என்பர். அதனால், இவ்வதிகாரம் கொடை செய்வாரை நோக்கியதன்றி, ஈகை செய்வாரை நோக்கியது ஆகாமை அறிக. இதனானே, இது பயன் கருதிச் செய்யப்படுவதாதலின், பின்னர் (தி.10, 7ஆம் தந்திரம்) வருகின்ற, பயன்கருதாத `மாகேசுரபூசையின்` வேறாதல் அறிக. கொடை, `தானம்` என்றும், ஈகை, `தருமம்` என்றும் சொல்லப்படும். ஈகை, `ஐயம்` எனவும்படும். திருவள்ளுவர் கொடையை விருந்தோம்பலில் கூறினார். ஈகையை, ஈகை என்றே வைத்துக் கூறினார். ஔவையாரும், `ஐயம் இட்டுண்` `தானமது விரும்பு` (ஆத்திசூடி) என்றார். பயன்பெரிதாதலும், பயன் கெடுதலும் இனிது விளங்குதற்பொருட்டு அபாத்திரத்தையும் இங்கு உடன் வைத்துக் காட்டினார். இத்திருமந்திரப் பொருளே பற்றி,
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலம்மலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலில் அழுந் தாதவகை எடுத்துப்
பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுத்துத் தவமாரும் பிறப்பொன்றில் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே.
எனச் சிவஞானசித்தி (சூ. 8 - 26) நூல் கூறுதல் காண்க. ``சித்தி`` என்றதை ``முத்தி`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக.
இதனால், கொடை செய்வோர் சற்பாத்திரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.