
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
பதிகங்கள்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே.
English Meaning:
Filled with arrogance as Guru SupremeMal vaunted his egoism about;
Then the Lord of the Silver Mountain made the discus fly away
And it orbited around the seven worlds.
Tamil Meaning:
`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.Special Remark:
`சக்கரம் மேல்போக ஏழும் படைத்துள்ளான்` என்றாரேனும், `ஏழு பார் போகமும் படைத்து அவற்றை நிலை நிறுத்தச் சக்கரம் மேற்போக அளித்துள்ளான்` என்றல் கருத்து என்க. போதகன் - போதிப்பவன். இதற்கு `அறம்` என்னும் செயப் படுபொருள் வருவித்துக்கொள்க. திருமால் அறத்தைப் போதித்தல் சில நூல்களாலும், கொடியோரை அழிக்கும் செயலாலுமாம். கால் போது - வெளிப்படுத்தும்பொழுது: என்றது, `செருக்கினால் அறத்தை அழிவுசெய்து ஒழுகும்பொழுது` என்றதாம். ``அங்கையினோடு`` என்றது, `வறுங்கையால் போர் செய்யாது வலியதொரு கருவி கொண்டு போர் செய்தற்கு` என்றபடி. அம் - அழகு. தரம் - மேன்மை. `மேல் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபெருமான் உண்டாக்கியதாகக் கூறிய சக்கரத்தைத் திருமால் பெற விரும்பிச் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச் சித்து வழிபட்டு வர, ஒருநாள் அவற்றுள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்தருளத் திருமால், அம்மலருக்கு ஈடாகத் தமது கண்ணைப் பறித்து அப்பெருமான் திருவடியில் சாத்தினார். அதனால் மகிழ்ச்சி யுற்ற சிவபெருமான் அவருக்கு அக்கண்ணை அளித்து, அவர் விரும்பிய அச் சக்கரப் படையையும் அளித்தருளினார்` என்பதும் கந்த புராணத்துள் அங்குத் தானே கூறப்பட்டது. கண்ணைத் தாமரை மலராகச் சாத்தினமையால், திருமாலுக்குச் சிவபெருமான், `பது மாட்சன்` (தாமரைக் கண்ணன்) என்னும் பெயரையும் அளித்தார் என்பது, காஞ்சிப் புராணத் திருமாற்பேற்றுப் படலத்துட் கூறப்பட்டது. இவ்வரலாறு,சலமுடைய சலந்தரன்ற னுடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ,
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
-தி.8 திருச்சாழல், 18
எனவும்,
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
-தி.8 திருத்தோணோக்கம், 10
எனவும் திருவாசகத்து எடுத்தோதப்பட்டது.
இதனால், திருமால் தமது காத்தல் தொழிலை இனிது நடத்தற் பொருட்டு அவருக்குச் சிவபெருமான் சக்கரம் அளித்தருளினமை கூறப்பட்டது. இவ்வரலாற்றைக் குறிக்கும் தலங்கள் திருவீழி மிழலையும், திருமாற்பேறுமாம். இதனை ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களால் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage