
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
பதிகங்கள்

உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.
English Meaning:
Thoughts Stand Still in the BeyondYou dumb ones!
They seek to speak,
Of the One beyond speech!
Can you ever reach the shores
Of the Shoreless Vast?
For them whose thoughts stand still,
Like the waveless waters,
Unreserved He appears;
He of the matted locks.
Tamil Meaning:
`கடலுக்கு கரை யில்லை` என்பது தெளிவு. (`கரை` எனப்படுவன எல்லாம் தீவுகளே) அங்ஙனமாகவும் அதற்குக் கரை யிருப்பதாகக் கருதிக்கொண்டு, அந்தக் கரையைச் சென்று காண முயலுதல் அறிவுடைமையாகுமோ? ஆகாது. அதுபோலச் சிவம் வியாபகப் பொருள்; சொல்லிற்குள்ளும் அடங்குவதன்று. அவ்வா றிருக்கவும், மாணவர்களே, நீங்கள், `சிவத்தை யாம் சொல்லாற் சொல்லி உணர்த்திவிடுவோம்` என்று உணர்த்த முயல்வீர்களேயானால், ஊமன் தனது கருத்தைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்த முயலுங்கால் அடையும் இடர்ப்பாடுகளைத் தான் அடைவீர்கள் அடைந்தாலும் உங்கள் கருத்து நிறைவுறாது. உண்மையென்ன வெனில், `அலை யில்லாத கடல் ஒன்று இருக்குமேயானால் அதனோடு ஒத்துச் சிறிதும் சலனம் அற்றுத் தெளிந்த விரிந்த அறிவினை யுடையாரது அறிவில் சிவன் வரம்பில் பொருளாய் ஒளிர்கின்றான்` என்பதே.Special Remark:
`பஞ்சாக்கரத்தை அறியும் முறையில் அறிந்து, ஓதும் முறையில் ஓதினால், அஃது இந்தத் தெளிந்த அறிவைத் தந்துவிடும்` என்பது கருத்து. முன்னிரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி வந்தது. ``நீர்`` என்றது கரையற்ற நீரை ஆதலால், அது கடல் நீரேயாயிற்று. ``திரையற்ற நீர்போல்`` என்றது இல்பொருளுவமை. புரை - சிற்றிடம் அஃது` `ஏகதேசம்` ஒரு புடை) என்பதைக் குறித்தது. ``உரையற்ற தொன்று`` என்றதனால், முத்தி பஞ்சாக்கரத்தையும் சுத்தமானதம் ஆக அறிவாற் கணித்தலே இங்கு விதிக்கப்பட்டதாம்.இதனால், முத்தி பஞ்சாக்கரத்தை அறியும் முறை ஓதும் முறைகளின் மாட்சிமை உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage