
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
பதிகங்கள்

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.
English Meaning:
He is Subtle Beyond Thought and Speech—Seek and Find HimBeyond speech and thought
Is hidden that Vedic Object;
Look at it;
It is an Object subtle by far;
It has no coming, no going, no perishing;
All blessings are
For those who seek Lord true.
Tamil Meaning:
(முன் மந்திரத்தில் சிந்தையினுள்ளே இருப்பதாகச் சொல்லி சிவன்) வாக்கும், மனமும் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையில் உள்ள ஓர் உள்ளீடான பொருள். ஆகவே, அவனை நேக்கும் முறை யறிந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கும்பொழுது அந்நோக்கிற்கு அவன் மிக நுண்ணிதாய்ப் புலனாகும் பொருளாவான். புலனாகியபின் அவன் போதல் இல்லை புலனாகும் பொழுதும் புதியனாய் அப்பொழுது தான் வந்து புகுதலும் இல்லை (முன்பே உள்ளவன் என்பதாம்.) அவனுக்கு என்றும் அழிவில்லை. `அழிவில்லை` எனவே தோற்றமும் இல்லையாம். நன்மையாவன பலவும் அவனை அவ்வாற்றால் நுணுகி நோக்கி அடைவார்க்கே உளவாம்.Special Remark:
மறைந்தவிடத்துத் தோன்றும் பொருளை மறைந் ததனால் தோன்றும் பொருளாக உபசரித்தார் ஆதலின், மறைந்த பொருள் என்பதில் பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டதாம். மறை பொருள் - மறைவை உடைய பொருள். ``மறைப்பொருள்`` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்த `சிவன்` என்னும் எழுவாய்க்குப் பய னிலையாய் நின்றது. பொருளை `வாக்கு மனம் மறைந்தது` என்றும், `மறைவுடையது` என்றும் கூறிப்பின், ``நோக்குமின்`` என்றதனால், `நோக்குமாற்றால்` என்பது போந்தது. நோக்குமாறாவது பிற ஒளிகள் அடங்கியொடுங்க நிற்கும் ஞாயிற்றைப் பிற ஒளி கொண்டு நோக்காது அதன் ஒளியையே கொண்டு நோக்குதல் போல அதன் ஒளியையே கொண்டு நோக்குதல். `அவ்வொளி அருள் ஒளி என்க. அது, நோக்கப் படும் பொருளாய், நுண்ணிதாம் என்க. நன்மைகளாவன ஆசை யறுதலும், அதனால் துன்பம் நீங்கலும், அன்பு வளர்தலும், இன்பம் மிகுதலுமாம். இறுதியில், `உளவாம்` என்னும் பயனிலை வருவிக்க. `முன்னர் அஃறிணையாகக் கூறியனயாவும் `சிவனே` என்றற்கு ஈற்றில், ``அத்தன்`` என உயர்திணையாகக் கூறினார்.இதனால், அருள் ஒளியாலே சிவரூபம் தோன்றுதல் கூறும் முகத்தால், ஞானிகள் அருளாலல்லது எதனையும் நோக்காமை கூறப்பட்டது.
``அருளே உலகெல்லாம் ஆள்விப்ப(து); ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு``*
என்னும் அம்மை திருமொழியையும்,
``அருளால் எவையும்பார் என்றான்; - அத்தை
அறியாதே, சுட்டிஎன் னறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன்; என்னேடி தோழி``3
என்னும் தாயுமானவர் வாக்கையும் நினைக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage