ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்

பதிகங்கள்

Photo

சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

English Meaning:
Siva Reveals in Doubt-Free Thought

Those whose thoughts inseparable in Siva merge,
In their thoughts, Siva reveals;
Those who can vision their thoughts doubt-free,
In their thoughts, Siva is.
Tamil Meaning:
அறிவுப்பொருளாகிய உயிரும், அறிவுக்கறிவாய் உள்ள சிவனும் பொருளால் வேறேயாயினும், உடல் உயிர் போல ஒன்று பட்டு நிற்கும் கலப்பினால் வேறு நிற்பவர் அல்லர். ஆகவே, உயிரினது அறிவினுள்ளே, விறகில் தீயும், பாலில் நெய்யும் போலத் தோன்றாது மறைந்து நிற்கும் சிவன் அவ்விடத்தில் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால், தங்கள் அறிவு மாசற்று விளங்கும்படி அவ்வுண்மை உணர்வில் உறைத்து நிற்க வல்லவர்கட்கு, கடைய வல்லவர்க்கு விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படுதல் ஒருதலையாதல் போல அவர்களது அறிவில் சிவன் வெளிப்பட்டு விளங்குதல் ஒருதலை.
Special Remark:
``விறகில் தீயினன், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே``3
என்னும் அப்பர் அருள்மொழியை நெஞ்சினுள் ஆழப்பதித்துக் கொள்க. தெளிதல் இரண்டில் முன்னது மாசு நீங்கி, விளக்கம் பெறுதலையும், உறுதிப்பட உணர்தலையும் குறித்தன. அவை ஈரிடத்தும் செயவென் எச்சமாய் நின்றவற்றில் முன்னது காரியப் பொருட்டாய வினை யெச்சமாயே நின்றது; பின்னது தொழிற் பெயர்ப்பொருள் தந்தது. ``இருந்தான்`` என்னும் இறந்த கால வினை தெளிவை விளக்கி நின்றது. ஏகாரம், தேற்றம். எனவே, `மெய்யுணர்ந்தோர் ஒருஞான்றும் தங்கள் சிந்தையில் சிவன் இருத்தலை மறவார்; அதனால், அவர் மீள ஒரு ஞான்றும் பந்தத்தில் வீழார்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
இதனால் ஞானிகள் சிவரூப நிலையினின்றும் வழுவாமை கூறப்பட்டது.