
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
பதிகங்கள்

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.
English Meaning:
No Karma, if Thought and Word are ConsistentThrough thought, word and deed
Karmas accumulate;
If thought and word consistent stand
Karma bides not;
Thought and word conquering,
They experience Karmas,
And alter their course,
They the great Jnanis are.
Tamil Meaning:
உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கிமெய்ஞ்ஞானத்தைப்பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.Special Remark:
ஞானிகள் அவ்வாறுதான் அவைகளைச் செயற்படுத்தி நிற்பார்கள்` என்பது குறிப்பெச்சம். மனோ வாக்குக் காயங்கள் நேர் முறையில் செயற்படுதலாவது, `நாம் செயற்படுவது திருவருளால்` என்பதை மறவாமல் நினைந்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல். உடையானது நேர்மை, நேர்மை இன்மைகள் உடைமைகளின் மேல் ஏற்றிச்சொல்லப்பட்டன. ``தன்`` என்றது தற்போதத்தை, தற்போதத்தால் நுகராது சிவபோதத்தால் நுகரின் சிற்றின்பமும் பேரின்பமேயாகும். இதனை,``பெற்றிசிற் றின்பமே பேரின்ப மாம்அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற,
முளையாது மாயையென் றுந்தீபற`` -திருவுந்தியார் - 33.
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்(து) ஆக்கில் - தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை, முடிவதுமொன் றில்லை; இளைப்பதுமொன் றில்லை இவர்``
-திருக்களிற்றுப்படியார் - 76.
எனவும் போந்த சாத்திரங்களாலும், மற்றும்,
``காணும் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியான்`` -திருவாசகம் - பண்டாய நான்மறை - 6.
என்னும் திருமொழியாலும் உணர்க. வாதனை - வாசனை. தன், சாரியை. வாதனையால் விளைவன ``வாதனை`` எனப்பட்டன. ``வாதனைதன்னால்`` என்னும் மூன்றாம் உருபை, `வாதனைதன்கண் என ஏழாம் உருபாகத் திரிக்க.
இதனால் ஞானிகள் பிராரத்தம் காரணமாகப் பழைய வாசனை தோன்றும்பொழுது அதனால் திரிபெய்தாது நிற்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage