
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
பதிகங்கள்

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.
English Meaning:
Constituents of PranavaEarth, Water, Fire, Air, Space
Sun, Moon, Agni and Star
These nine constitute Pranava
The Way that is Great.
Tamil Meaning:
`பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.Special Remark:
இங்கு, `பிரணவம்` என்றது பிராசாதத்தினை. மண்டலம் அல்லது வட்டமாவது பகுதி. ஒன்பான் வட்டங்களுள், தீயைப் பஞ்ச பூதங்களிடை, ``கனல்`` என்றும், முச்சுடரில் இறுதிக்கண் ``அங்கி`` என்றும் இருகால் ஓதியதனாலும், மேலேயும் (பா.835, 837) அக்கினிக்கு இருவகைக் கலையளவு கூறினமையாலும் `அடங்கு தீ, அழலுந் தீ` எனத் தீயை இரண்டாகக் கொள்ளுதலும், பூதத் தீ அடங்கு தீயும், சுடர்த் தீ அழலுந் தீயும் ஆதலும் பெறப்படும்.பிருதிவி வட்டம் முதலிய ஒன்பான் வட்டங்களை, ``பிரணவ மாகும் பெருநெறி`` என்றமையால், அவை பிராசாத கலைகளின் தானங்களேயாயின. அத் தானங்கள் பன்னிரண்டனுள் இறுதி நான்கும் நிராதாரமாதலின், சந்திர கலை முதலிய நால்வகை கலைகளும் அவ் விடத்துச் சொல்லமாட்டா. எனவே, எஞ்சிய எட்டுத் தானங்களோடு சோடசகலைத் தானங்கள் இரண்டு கூடத்தானங்கள் பத்தாம். ஆயினும், `அருத்த சந்திரன், நிரோதினி` என்னும் இருகலைகட்கு இடையேயும், அவற்றின் தானங்கட்கிடையேயும் உள்ள வேற்றுமை சிறிதாகலின் அத்தானங்கள் இரண்டையும் ஒன்றாகக் கொள்ளத் தானங்கள் ஒன்பதாய், அவை இங்குக் கூறிய ஒன்பான் வட்டங்களாயும் அமையும். இவற்றுள், அழலுந் தீயை மரபுபற்றிச் சுடர்களோடு வைத்து எண்ணினாரேனும், `அது மூலாதாரத்தில் உள்ளது` என்பதே யோக நூல் துணிபாதலின், அதனை அங்ஙனமே வைக்க, `மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, நெற்றி, தலை, தலையின் பின்புறம்` என்னும் இடங்கள் முறையே, `அங்கி, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம்` என்பவற்றின் வட்டங்களாம் என அறிக. பிராசாத கலைத் தானங்களை இவ்வாறான ஒன்பான் வட்டங்களாகக் கூறியது, ``மேற்கூறிய சந்திர கலை முதலிய நால்வகைக் கலைகளும் இப்பிராசாத கலைத் தானவகையினால் இங்குக் கூறிய பிருதிவி கலை முதலிய ஒன்பான் கலைகளாயும் நிற்கும்`` என்பது உணர்த்துதற்கு என்க. அரணியம் - காடு; என்றது ஒளிக்கற்றையை. முரணிய - தம்முள் மாறுபட்டு விளங்குகின்ற.
இதனால், மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட நவ மண்டலங்கள் (ஒன்பான் வட்டங்கள்) இவை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage