
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
பதிகங்கள்

மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
English Meaning:
He Sat SupremeHe sat like the Moon
Beaming Kalas Sixteen;
In His Mansion that is body,
Art Kala worlds two hundred and twenty four;
And within that Divine Mansion shedding rays,
He sat Supreme in accord within.
Tamil Meaning:
மாவினையாளர் மதியில் உள்ள சிவன், அதில், சந்திரனது கலைகள் போல்வனவாகிய பிராசாத கலைகள் பதினாறாய் நின்றும், புவன பதிகளின் இடமாகிய புவனங்கள் இருநூற்றிருபத்து நான் காய் நின்றும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகள் ஆகிய பகைவர் அவ்யோகியர் எதிர்சென்று போர்புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.Special Remark:
பிராசாத கலைகள் பலவற்றுள் சிறப்புடையன சோடச கலைகளாதலின் அவற்றையே கூறுவார். அவை யோகியின் உணர் விற்கு உரியவாதல் இனிது விளங்குதற்கு ``மதியின் எழுங்கலை போல`` எனச் சிலேடித்துக் கூறினார். `பதிகள்` என்னாது `பதி` என்றது பன்மையொருமை மயக்கம், `ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப` என்பதிற்போல. ``நூறுநூற்`` றென்னும் சீரில் குற்றியலுகரம் அலகு பெறாது நின்றது. அத்துவாக்களுள் புவனங்களே பருப்பொருளாய் இனிது விளங்கலின், அவற்றைக் கூறவே, அவற்றொடு பிரிப்பின்றி நிற்கும் ஏனையவும் கொள்ளப்படும். ஆறு அத்துவாக்களுடன் நால் வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதங்களாகிய சராசரங்கள் யாவும் நெறியில் பிண்டத்துள்ளே நிற்கும் முறையைப் பிராசாத நூல்கள் இனிது விளங்கக் கூறுதலை அந்நூல்களுட் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். கதி - நடை. யோகிகளது உணர்வில் அத்துவாக்கள் பலவும் தானேயாய் நின்று அவர்களது, உலகியல் உணர்வைத் தடுக்கும் முகத்தால் சஞ்சித பிராரத்த கன்மங்களின் வலியைக் கெடுத்தலின், ``கணைகள் பரப்பி - எதிர் மலையாமல் இருந்தனன்`` என்றார். மலைதற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தலின் மேல், பிராசாதமாகச் செய்தல் பெரும்பயன் உடைத்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage