
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
பதிகங்கள்

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.
English Meaning:
In Samadhi Jiva Unites in Uncaused BeingTranscending Jiva`s caused limitations
And accepting the Causal Tattvas
Extinguishing the Causal sources themselves,
Thus do tapasvins unite in the Being Uncaused
That, in truth is Samadhi supreme.
Tamil Meaning:
தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.Special Remark:
`உபாதி` எனினும், `செயற்கை` எனினும் ஒக்கும். அது தாத்துவிகத்தின் மேல் ஆதற்கு, ``காரியமான உபாதி`` என அடை கொடுத்து ஓதினார். `கடந்தபின்` என்பது `கடந்து` எனத் திரிந்து நின்றது. ``ஆரிய`` என்பது, `ஆர்` என்பது அடியாகப் பிறந்த பெய ரெச்சம். ஆர்தல் - நிரம்புதல்; காரியத்தின் தோற்றத்திற்கு ஏற்புடைத் தாதல். தாத்துவிகங்கட்குக் காரணம் தத்துவமாதல் வெளிப்படை. ஏழென்னும் தொகையானே, இவை வித்தியா தத்துவமாதல் விளங்கும். இவற்றோடே அசுத்தம் நீங்குதல் பற்றி, இவற்றின் மேல் உள்ளவற்றைக் கூறிற்றிலர். ``வாரிய`` என்பது, `வாரி` என்பது அடியாகத் தோன்றிய பெயரெச்சம். வாரி - வருவாய். இது முடிவின்றி வருதலை உணர்த்திற்று. முடிவின்றிக் கிளைத்து வரும் காரணப் பொருள் வினையேயாதல் அறிக. `தாரியல் தவம்` என மாற்றுக. தார் - ஒழுங்கு. ``தற்பரம்`` என்பதில் தன் என்பது ஈறு திரிபெய்தி முடிந்தது. ``சமாதி`` என்றது, அதன் பயனை. உபாதியைக் கடத்தல் முதலிய மூன்றும் யோகத்தின் குறிக்கோள் என்பதை முன்னர் உணர்த்தி, மறுமையில் தான் தியானித்த பொருளோடு ஒப்ப நிற்றல் யோகத்தின் முடிந்தபயன் என்பதனை இறுதியிற் கூறினார். சித்தாந்த நெறி உணராதார், `உபாதி` என்பதே பற்றி இத்திருமந்திரத்திற்குச் சொற்களை வேண்டியவாறே நலிந்துரைத்து, மாயாவாதப்பொருள் கூறுவர்.இதனால், சமாதியின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage