
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
பதிகங்கள்

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
English Meaning:
Even Celestials Have to Follow the Path of DevoteesSeeking the good path
They turn away from Death`s path;
They walk the path of Truth
They seek the path of Liberation;
Of limitless bounty they are;
Well may the Celestials
In directions eight roam
They perforce have to come
To this earth`s way of devotees,
And there Him seek.
Tamil Meaning:
மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.Special Remark:
சொல்வழியாளர் - சொல்லால் வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர். எனவே, `அவரது சொல், அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயனைத் தப்பாது தருவது, என்பது பெறப்பட்டது. இதனையே ``நிறைமொழி`` எனத் தொல்காப்பியரும், (தொல். செய்யுளியல், 171) திருவள்ளுவரும் (குறள், 28) ஒருபடித்தாகக் கூறினர். இங்ஙனம் கூறவே, `அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறுணர்த்துவார் இவரே` என்பது போந்தது. இவர் இவ்வாறு நிறைமொழி யுடையராதல் தாரணை யோகத்தில் நிற்றலால்; அஃதாவது, மனத்தைப் பிறழவிடாது குறித்த பொருளிடத்தே நிறுத்தி நிற்றலாலாம். இவரே ஐம்புல ஆசையை முழுதும் வென்றவராவர்.ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. -குறள், 354
என்னும் குறளின் உரையில் பரிமேலழகரும், ``ஐயுணர்வு எய்து தலாவது, மனம் மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல்`` என்று உரைத்தார். எனவே, ``உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காத்தல்`` (குறள், 24) என்பதும் தாரணையே யாயிற்று. இந்நிலையைப் பெற்றோர் நிறைமொழியாளராதலை,
ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. -குறள், 25
என்பதனாலும் அறிக. இவையெல்லாம் பிரத்தியாகார நிலைக்கு ஏலாமையும், தியான சமாதிகளில் சிறுபான்மையன்றிப் பெரும் பான்மை நிகழாமையும் அறிந்துகொள்க. இமையவரது பல்வழி என இயையும். `பாரில் இல்வழியாளர் வழியாகும்` என மாறிக் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இத்தொடர் தாம் எய்திநின்ற உலகத்தேயன்றி அதற்குக் கீழுள்ள உலகங்களினும் வியாபகம் உடையராதலை உணர்த்திற்று.
இதனால், தாரணையின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage