
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
பதிகங்கள்

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.
English Meaning:
If Gurus who are devout of GodAre caused pain in heart
The country, people and their greatness
Will all as one destroyed be;
The thrones of heavenly king Indra,
And of kings mighty here below,
Will alike crumble down;
Sure This is,
I swear by our Nandi true.
Tamil Meaning:
சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகு மாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.Special Remark:
இவ்வாறே,தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும்; தாபதர்கள்
தாம்உணரில் இந்தத் தலம்உணரும் - தாம்முனியில்
பூமடந்தை தங்காள்; புகழ்மடந்தை போயகலும்;
நாமடந்தை நில்லாள் நயந்து.
எனத் திருக்களிற்றுப்படி(பா.68)யும் கூறிற்று. இதனால், சிவனடியாரது மனம் நோவாமைக் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் பெறப்படுதலின், அது பற்றியே நாயனார் முன்னர்,
ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவா தொழிவனேல்,
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. -தி.10 பா. 242
என விதித்தார்.
``மதுரையில் ஆளுடைய பிள்ளையாரோடு ஒட்டி வாதில் தோற்ற சமணரை நின்றசீர் நெடுமாறர் கழுவில் ஏற்றியது, அவர்தாமே, `வாதில் அழிந்தோமாகில் - வெங்கழு வேற்றுவான் இவ் வேந்தனே` (தி.12 பெ.பு ஞானசம், 798) என உடன்பட்டமையை முதன்மையாகக் கொண்டன்று; அதற்கு முன்பே பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தில் இரவில் தீயிட்டுத் திருக்கூட்டத்தார் பலரை உளம் நடுங்கச் செய்த மாபாதகம் அவரையும், தன்னையும், பின்பு தொடராமைப் பொருட்டே`` என்பதையும் ``அஃது அன்னதாகலின் அதனை விலக்கின் தமக்கும் குற்றமாம் என்று கருதியே பிள்ளையார் அரசன் செயலைத் தடுத்திலர்`` என்பதையும் சேக்கிழார்,
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற.
-தி.12 பெ.பு ஞானசம். 853
எனவும்,
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக் கேட்டும்
இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த எல்லை.
-தி.12 பெ.பு ஞானசம். 854
எனவும் இனிது விளங்க அருளிச்செய்தார். ஆயினும், அவற்றைச் செவிமடாது, `பிள்ளையார் வேந்தன் செய்கையை விலக்காதிருந்தமை அவர்க்கு அறமாதல் இல்லை` எனக் கூறிப் பிணங்குவார் உளராயின், அவர்க்கு நாம் கடவதொன்றில்லை. தண்டியடிகள் நாயனாரோடு ஒட்டித் தோற்ற சமணரைச் சோழ மன்னன் ஊரை விட்டு அகற்றியது அவர் செய்த தீமையை ஒப்பநாடி அத்தக ஒறுத்ததேயாதல் அறிக. (புறம், 10)
இச் சிவாகமப் பொருளை மணிமேகலைக் காப்பியத்துள் புத்தர்க்கு ஏற்றியுரைத்தார் அதன் ஆசிரியர். (காதை.14, 29, 29, 21, 22)
இதனால் மாகேசுர நிந்தையால் விளையும் கேடு கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage