
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
பதிகங்கள்

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.
English Meaning:
The Devas and Asuras wasted their livesAnd finally died;
They attained not Jnana true;
They alone can attain Truth
Who adore Primal Lord in devotion intense.
Tamil Meaning:
`தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.Special Remark:
`அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage