
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
பதிகங்கள்

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
English Meaning:
Adulterers Rush to DoomOnly those who are rolling in wealth,
And those whose intelligence is obscured by ignorance,
Such yield to woman`s sensuous charms;
It is impossible to transform the minds of such men
Tamil Meaning:
செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.Special Remark:
`கண்டகன்` என்பது இடைக் குறைந்து நின்றது. செல்வச் செருக்கினாலும், புல்லறிவினாலும் தூர்த்தராய்த் திரிவோ ராயினும், அவர்தம் உள்ளமும், இம்மையில் `மழையைப் பெய் யெனப் பெய்விக்கும்` (குறள் 55) ஆற்றலையும், மறுமையில் புத்தேளிர் வாழும் உலகத்துப் பெருஞ் சிறப்பினையும் தருவது (குறள் 58) கற்பு என்று அதனது சிறப்பினைத் தெளிந்து அதன் கண்ணே நிற்கும் பெருந்தகைப் பெண்டிர்மாட்டுப்புகாது, அத்தெளிவின்மையால் அங்ஙனம் நிற்க மாட்டாது இழுக்கிச் செல்கின்ற பெண்டிர்மாட்டே புகுவராகலின், ``மருள்கொண்ட மாதர் மயல் உறு வார்கள்`` என்றார். இதனானே, அவ் இழுக்குடை மாதரும் கேடெய் துதலை உடம்பொடு புணர்த்துக் கூறினாராயிற்று. திருவள்ளுவரும்,தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். -குறள் 56
என்பதில் ``தகைசான்ற சொற்காத்து`` என்பதனால், அதனைக் `காவாதவள் பெண்ணல்லள்` என்பதும்,
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. -குறள் 57
என்பதனால், `சிறைக்காவல் நிறைக்காவலுக்குத் துணையாவதே யாகலின், அந்நிறைக்காவல் இல்வழிச் சிறைக்காவலாற் பயனின்றாம்` என்பதும்,
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. -குறள் 59
என்பதனால், ``கற்பென்னும் திண்மையால்`` (குறள் 54) கொண்டார்க்குப் பெருமையைத் தந்து, அவர்க்குத் தம் பகைவர்முன்னே ஏறுபோல இறுமாந்து நடக்கும் பீடு நடையை உண்டாக்கும் பெண்டிரே யன்றி, தம்மைக் கொண்டார்க்குத் தம் பகைவர்முன்னே தலை கவிழ்ந்து நிற்கும் இளிவரவினை உண்டாக்கும் பெண்டிரும் உளர் என்பது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறினமை காண்க. மேல், ``காத்த மனையாள்`` (தி.10 பா.199) என்பதனால் சிறைக்காவல் குறிக்கப்பட்டது. இவ்விழுக்குடையாளை, ``இல்லிருந்து எல்லை கடப்பாள்`` எனப் பிறருங் கூறி, அவளை, `வல்லே அருக்குங் கோள்` (திரிகடுகம்) என்பதனால், `உலகிற்கு ஆகாதவள்` என்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage