
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
பதிகங்கள்

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
English Meaning:
NOT COMMITTING ADULTERYSeek not the Thorny Date; Ripened Jack - Fruit is at Hand
The dear, wedded wife pines within the home,
But the lusting youth covets the guarded neighbour`s mate;
Even as one, declining the luscious ripeness of the jack,
Yearns for the tamer taste of the thorny date
div align=right >
Tamil Meaning:
அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.Special Remark:
ஆத்தம் - துணையாக நம்புதற்கு உரிய தகுதி. இஃது, `ஆப்தம்` என்னும் வடசொல்லின் திரிபு. இனி இதனை, `யாத்த` என் பதன் மரூஉவாகக் கொண்டு, `கட்டிய மனைவி` என்று உரைப்பாரும் உளர். பிறன்மனை நயத்தல், காமத்தோடு, `களவு` என்னும் குற்றமு மாம் என்றற்கு, ``காத்த மனையாள்`` என்றார். இவற்றால் மக்கட்குரிய நெறிமுறை இலராதல் பற்றிப் பிறன்மனை நயக்கும் பேதையரை `எருது போல்பவர்` என இழித்துக் கூறினார். காய்ச்ச, `காய்த்த` என்பதன் போலி `இயற்கையாய்ப் பழுத்த பழம்` என்றற்கு, `கனிந்த` என்னாது ``காய்த்த`` என்றார். இயற்கையானன்றி இடையே பறித்துச் செயற்கையாற் பழுக்க வைக்கும் பழம் சுவையுடைத்தாகாமை அறிக. `உண்ணமாட்டாமை, மடமையான் ஆயது` என்க. `பேதைமை யாவது, ஏதம் கொண்டு ஊதியம் போக விடலே` (குறள் 831) யாதல் உணர்க.தனது தோட்டத்தில் உள்ள பலாப்பழம் அச்சமும், இளி வரவும் இன்றி நாவாரவும், வயிறாரவும் உண்ணப்படுமாகலின் அதனை, அத்தன்மையளாய தனது மனையாட்கும், பிறனது புழைக் கடையில் உள்ள ஈச்சம் பழம் முள்ளுடைதாய அம்மரத்தியல்பானும், பிறனுடையதாகலானும் அச்சமும், இளிவரவும் தருவதாய் உண்ணப் போதாத சிற்றுணவாம் ஆதலின், அதனை, அத்தன்மையளாய பிறன் மனையாட்கும் உவமை கூறினார். அதனானே, பிறன்மனை நயப்பார் அறத்தையேயன்றித் தாம் கருதிய இன்பமும் பெறாமை பெறப்பட்டது. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும்,
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில். -குறள் 142
என்றார். இன்னும் அவர்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -குறள் 146
என்றலும் காண்க.
இதனால், பிறன்மனை நயத்தல் மடவோரது செயலாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage