
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
பதிகங்கள்

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.
English Meaning:
Siva`s Sport DivineEverywhere is the Holy Form;
Everywhere is Siva-Sakti;
Everywhere is Chidambaram;
Everywhere is Divine Dance;
As everywhere Siva is,
Everywhere Siva`s Grace is
All, all, His Sport Divine.
Tamil Meaning:
சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.Special Remark:
`எங்கும் சிவ சத்தி ஆதலால் எங்கும் திருமேனி ... ... ... இருத்தலால், சிவனது அருள் விளையாட்டே எங்கெங்கும் தங்கும்` என இயைத்து முடிக்க. `அது` பகுதிப் பொருள் விகுதி.இதனால், `எங்கும் நிகழும் எல்லாச் செயல்களும் அவனது திருவிளையாட்டாம் ஆதலின் அவ்விளையாட்டாகிய அவனது திருக்கூத்துக்கள் தாம் பலவாம்` என அவை தொகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage