
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
பதிகங்கள்

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.
English Meaning:
Tattvas Fade in the Finite StageEven in the Atita Turiya State
Six Tattvas formless abide
—The Purusha cum Chitta, and Five formless Tattvas;
In the Sushupti State of Atita Turiya,
The rest eight are;
Only in the Eleventh State, nothing of Tattvas is.
Tamil Meaning:
[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).
Special Remark:
ஆறும் - தணியும்; ஒடுங்கும் ``உடனே`` என்பது எண்ணொடுவின் பொருட்டாய் நின்றது. ``அருவம்`` என்றது, சூக்குமம் என்றபடி. அகார உகார மகாரங்களை நோக்க, விந்து நாதங்கள் சூக்குமம் ஆதலை உணர்க. ``அருவமொடு`` என்றது, `அருவத்தளவில்` என்றபடி. அதீதத்துரியம், உம்மைத் தொகை. `துரியத்தில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `மிக்குள்ள எட்டும் சுழுத்தியினின்றும் கீழ்க்கீழ் விரியும்`` என்க. புத்திமட்டும் தோன்றுவது சுழுத்தியும் அதனுடன் அகங்காரமும் தோன்றுவது சொப்பனமும் அவற்றுடன் மனமும் தன்மாத்திரையும் தோன்றுவது சாக்கிரமும் ஆகும். இம்முறையில் நாதாந்தம் முடிய, `துரியாதீதம்` எனச் சொல்லப் பட்டாலும் அதற்குமேலும் பரவிந்து பாநாதங்கள் இருத்தலால் பதி -னொன்றாந்தானமும் சகலத்தில் சுத்தாவத்தைத் தானமே - என்றபடி. இதனை, சிவமூல மந்திரங்களை நோக்கிப்பிரணவ கலைகள் பொதுவாக, `சூக்கும பஞ்சாச்சரம்` எனச் சொல்லப்பட்டாலும் அகார உகார மகாரங்கள் விந்து நாதங்களை நோக்கி, `தூலம்` எனச் சொல்லப் படுதலைப்போலக் கொள்க. ``பதினொன்றும்`` என்னும் உம்மை சிறப்பு. பிராசாத யோகத்தின் அவத்தைகளை எடுத்துக்காட்டியது. அவற்றிடையேயுள்ள தாரதம்மியங்கள் போன்றனவே சுத்தத்திற் சுத்தாவத்தைகட்கும், சகலத்திற் சுத்தாவத்தைகட்கும் இடையேயுள்ள தாரதம்மியங்கள்` என்பது உணர்த்துவதற்கு அவத்தைத் தானத்தை `அவத்தை` என உபசரித்தார்.இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் காரணங்காட்டி வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage