
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
பதிகங்கள்

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
English Meaning:
Attainments in Higher Experience (Para Avasta)In the Fifth State (Jiva Turiyatita) is Ambrosia;
In the Seventh State (Para Turiya-Jagrat) is Bliss;
Above in Ninth State (Para Turiya-Sushupti) is Aum;
In the Eleventh State (Siva Turiya)
Illumined the Jiva standeth;
Abiding there He the (Divine) Body, attains;
Listen damsel that is red-mouthed as parrot!
—These the attainments of the Higher States (of Jiva) are.
Tamil Meaning:
கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.Special Remark:
``மூஞ்சில் ஓங்காரம்`` என்பதை முதலிற் கொள்க.`ஓர் ஒன்பானில், பதினொன்றில் வைத்திடில், வஞ்ச அகமே நின்றும் கிளிமொழி கேள்காயம் ஆம்` எனக் கூட்டி முடிக்க.
வைத்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பிரபஞ்சம், `வஞ்சம்` என வந்து, புணர்ச்சியில் வகரம் கெட்டபின் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்றும்` என்னும் உம்மையும் தொகுக்கப் பட்டது. கேள் - கேள்வன். ஈற்றடியை மகடூ முன்னிலை யாக்கினாரும் உளர். நாயனார் இந்நூலில் யாண்டும் மகடூ முன்னிலை வைக்கக் காண்கிலம்.
இதனால், பிராசாத யோகமும் கரணத்தோடு கூடிய மலாவத்தையேயன்றி, நின்மலாவத்தை ஆகாமை அதன் பயன்கள் சிலவற்றை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
மேல் மந்திரம் - 696 இன் உரையைக்கொண்டு இப் பொருளைத் தெளிக. மற்றும் பிராசாத நூல்களையும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage