
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
பதிகங்கள்

அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.
English Meaning:
Jnanis accept alms to sustain the Body-TempleThe holy ones who have tasted of Lord`s inner grace
Will at noon-tide accept alms
To sustain the body temple where the Lord resides;
Of differences they think not;
All desires extinguished,
They in solitude are seated.
Tamil Meaning:
தம்முள் நிற்கின்ற சிவனுக்குள்ளே தாம் நின்று அவனது திருவருள் இயல்பை அநுபவமாக உணர்ந்த அடியார்கள் பசிமிகுந்த போது தம்முள்ளே அமர்ந்திருக்கின்ற தலைவனது இல்லமாகிய உடலில் உயிர் நின்றாங்கு நிற்றற் பொருட்டு, பிச்சையேற்று உண்டு சிவனைத் தம்மின் வேறாக நினையாது தாமேயாக நினைந்து உலகப் பற்று அற்று ஒன்றாகிய சிவ நிலையிலே உயர்ந்திருப்பார்கள்.Special Remark:
அகரச் சுட்டுப் பின்னர் வருகின்ற உள்நிற்குந் தன்மையைச் சுட்டிற்று. சிவனுள் தாம் நிற்றலாவது அவனது இச்சா ஞானக் கிரியையகளின் வியாபகத்தில் தமது இச்சா ஞானக் கிரியைகள் வியாப்பியமாய் அடங்கி நிற்க நிற்றல். ஏகாந்தத்தேயிருப்பவர்க்குக் கால வேறுபாடு இல்லையாகலின் ``உச்சியம் போதாக`` என்பது பசி மிகுகின்ற காலத்தையே குறிக்கும். அவரினும் கீழ் நிற்பார் கால வேறுபாடுணர்ந்து உச்சியம் போதாகிய ஒருவேளை உண்டு. ஏகாந்தத்தில் ஏறியிருக்க முயல்வர். `அவரினும் கீழ் நிற்பார் உச்சியம் போதுடன் இரவு ஒருவேளையும் உண்பர்` என்பது``பரம னடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும்
பறை நிகழ்த்தி`` -தி.12 திருநாவுக்கரசர்., 259
என்றமையான் அறியப்படும். `தம்மை இறைவன் உடைமையாகக் கருதுவர்` என்றற்கு ``கோ இற்கு`` என்றார். பிச்சை - தானம். அடியவர் தானம் ஏற்பரே யன்றித் தருமம் ஏலார். பிடித்தல் - ஏற்றல். ``பேதம் அற நினைந்து`` என்பது முதலாகக் கூறியன, அவையெல்லாம் வாய்த்தற் பொருட்டே அடியவர் உணவை நாடுவர் என்றற்கு.
இதனால் முன் மந்திரத்திற் கூறியவாறு அடியவர் அன்புடையார்பால் சென்று அவர் அளிக்கும் உணவை ஏற்று உண்டலும், உயர்நிலைபெற்று ஞானத்தையும் அதன் பயனையும், எய்துதற் பொருட்டு எனக்கருதி உண்ணல் வேண்டுமன்றி, வாளா, `உடலோம்புதற் பொருட்டு` எனக்கருதி உண்ணலாகாது என்பது கூறப்பட்டது. முன்பு நாயனார், மூன்றாம் தந்திரத்தில்
`உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே``
என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றியேயாகும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage