
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
பதிகங்கள்

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலமா தாகும் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.
English Meaning:
Sarupa State by Nearness to GodAll things, living and non-living,
As they reach the Golden Mount of Meru
Are themselves into gold transformed; Even so,
They that reach the world to Master Divine
Attain the Form Light Divine
His, of the King of Kailas.
Tamil Meaning:
பொன்மலையைச் சார்ந்த சராசரங்கள் யாவும் பொன்னேயாய் விளங்குதல்போல், திருக்கயிலாய மலையில் கல்லால் நிழலில் தென்முகக் கடவுளாய் நீங்காதிருந்து ஞான நெறியைத் தக்கார் வழியாக உலகிற்கு என்றும் அளித்து வரும் சிவபிரான் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானது உலகத்தை அடைந்த யோகிகளது உருவம் கயிலையில் மேற்கூறியவாறு வீற்றிருந்தருள்கின்ற பெரு மானது ஒளி பொருந்திய உருவத்தோடு ஒத்த உருவமேயாகிவிடும்.Special Remark:
உவமை, ``கதிர்வடிவாம்`` என்பது. அதனோடு ஒன்றேயாய் அதுவாகிவிடாது, அதனோடு ஒத்த தாம் என்பது விளக்கி நின்றது `லோக சயிலத்தினை` என மாற்றி உரைக்க. `அச்சயிலம தாகும்` எனச் சுட்டியுரைக்க, உலோகம், இங்கு,பொன். முன்னர், ``பொற் சயிலம்`` என்றதனால், பின்னர், `அச்சயிலம்` என்பது, `பொன்` என்னும் பொருட்டாய் நின்றது. பொன் மலையைச் சார்ந்தன யாவும் பொன்னாய் விளங்குதலை,``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே`` 1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியானும் அறிக. ``புக்க போதே`` எனப் பொதுப்படக் கூறினாரேனும், யோகத்தால் ஒன்றிப் புக்க பொழுது` என்பது, ``சார்ந்த பொழுதே`` என்ற உவமையிற் போந்த சார்ச்சி வகை யால் பெறப்பட்டது. படவே, கதிர்வடிவாதல் அவரது உருவமேயாதல் விளங்கிற்று. இவ்வுலகரும் தன் உலகத்தை அடைதற் பொருட்டுச் சிவபெருமான் அருள்புரியுமாற்றை உணர்த்தற்கு, ``பயிலுங்குருவின் பதி`` எனவும், ``கயிலை இறைவன்`` எனவும் அருளிச் செய்தார்.
``மண்ணுல கிற்பிறந்து - நுமை - வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் - தொண்ட - னேன்இன்று [கண்டொழிந்தேன்`` 2
என்று அருளிச்செய்ததும் காண்க.
இதனால், சாரூபத்தினது இயல்பு உவமையின் வைத்து விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage