
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
பதிகங்கள்

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே.
English Meaning:
Sex Union Through the Pariyanga Lasts Five Ghatikas and is BlissThis is Pariyanga Yoga
That lasts five ghatikas;
Beyond in the sixth
The damsel sleeps in the arms of lover
In union blissful
That fills the heart
And passes description.
Tamil Meaning:
யோகி தன் மனைவியுடன் ஐந்து நாழிகை கலவியில் ஈடுபட்ட பின், மனைவி அவன் பக்கலில் அமைதியாய் உறங்குதல் ஒன்றே பரியங்க யோகத்தின் பயன். அதனால், ``நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது`` என்னும் இன்பமுறை, ஐந்து நாழிகையை எல்லை யாக உடைய பரியங்கயோகத்தின் கண்ணே மிகப் பொருந்துவதாம்.Special Remark:
``அஞ்சு கடிகைமேல்`` எனவும், ``பஞ்ச கடிகை`` எனவும் போந்தவற்றால் பரியங்க யோகத்திற்குக் கொள்ளத்தக்க காலம் வரையறுக்கப்பட்டது. `அத் துணைவி துணைவன் பால் துஞ்சுவது ஒன்று` என மாற்றியுரைக்க. ``ஒன்று`` என்பது, ஒன்றாம் பயனைக் குறித்தது. `ஒன்றே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. அதனை விரிக்கவே, `ஒன்றே பயனாம்` என்பது பொருளாம். `இஃது ஒன்றே பயன்` என்றதனால், `துறவு பூண மாட்டாது இல்லறத்தில் நிற்கும் யோகிக்கு இப்பரியங்க யோகம் ஆண் கடன் இறுத்தற் பொருட்டு உடன்படப்பட்டது` என்பது போந்தது. இனி, அவ் ஆண் கடன் இறுத்தலும், விலக்கிய காலத்துக் கூடாமை அறிந்து கொள்க. `விலக்கப்பட்ட காலங்கள் இவை` என்பதை,``மிகத் தெளிந்தார் ஓதி விதிநிசித்தம் எல்லாம்
பகற்பொழுது பாரார் பகம்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 224
``அட்டமி சட்டி பதினான்கைம் மூன்றினும்
தொட்டிடேல் இல்லவள்வேய்த் தோள்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 235
``சென்மமொரு மூன்றும் திருவா திரைஓணம்
என்னுமிவை தம்மினுந்தீண் டேல்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 226
என்பன முதலியவற்றான் அறிக. சென்மம் மூன்றாவன:- சென்மம், அனுசென்மம், திரிசென்மம். இவை தான் பிறந்த நட்சத்திரமும், அதனைச் சேர்ந்து எண்ண ஒன்று பத்தாவதும், அவ்வாறே அதற்குப் பத்தாவதுமான நட்சத்திரங்களுமாகும்.
``பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்`` என உலக நூலாகிய வைதிக நூல்கள் பொதுவாகக் கூறும் நால் வகை நிலைகளையே மெய்ந்நூல்களாகிய சைவ நூல்கள், `சரியை கிரியை, யோகம், ஞானம்` என ஓராற்றால் சிறப்பாகக் கூறும். அதனால், யோகி இல்லறத்தவனாயும், ஞானி துறவறத்தவனாயும் நிற்றலே பெரும் பான்மையாதலின், யோகியைப் பற்றிக் கூறும் இப்பகுதியுள் இப் பரியங்க யோகம் கூறப்படுகின்றது. அகத்தியர், கௌதமர் முதலியோர் போல ஞானியராயும் இல்லறத்தில் நிற்றல் சிறுபான்மை, அவர்க்கும் இப்பரியங்கயோகம் உரித்து என்க. ``யோகம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நெஞ்சு நிறைந்தது. வாய்கொளாமையாவது, உள்ளத்தில் நிறைந்த இன்பம் வாயால் சொல்ல வாராமை
இதனால், பரியங்க யோகத்திற்கு நாழிகை வரையறை கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage