
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
பதிகங்கள்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.
தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.
English Meaning:
The Being First,The Meaning-Central of Vedas all,
The Light Divine,
The Fire within that Light
He who shares Himself
Half-and-Half with His Sakti
And the Divine Justice thereof
—Them, he in Niyama`s path knows.
Tamil Meaning:
சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.Special Remark:
`சிவபெருமானது ஒறுக்கும் ஆற்றலையும், அருளும் ஆற்றலையும் உணர்பவனே இயம நியமங்களில் நிற்க வல்லவ னாவான். ஆயினும், இயமத்தையும் அன்பின் வழிக்கொள்ளுதலே சிறப்பு என்பார் இதனை இங்குக் கூறினார். இயமம் இறைவனது ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினாலும், நியமம் அவனது அருளை விரும்பும் அன்பினாலும் ஆகற்பாலனவாதலை அறிந்துகொள்க.``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச்செய்தார்.
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.
என்றார் குமரகுருபர அடிகள். அங்கி - அக்கினியாய் நிற்பவன். நீதி - நடுவுநிலைமை; அஃதாவது பொல்லார்க்கும், நல்லார்க்கும் தெறலும், அளியும் அவரவர் செயலுக்குத் தக்காங்கு செய்தல். உடன் நீதி - உடனாய் நின்று செய்யும் நீதி. ``அளி, தெறல் இரண்டும் கருணையே`` என்றற்கு, பராசத்தியோடு உடனாய் நிற்றலை எடுத்தோதினார்.
இதனால், இயம நியமங்கள் வருமாறு கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புகளில் காணப்படும், ``தூய்மை அருளூரண் சுருக்கம்`` என்ற பாடல் இயமத்தையே கூறுதலானும், அதன் பொருள் மேலே, ``கொல்லான் பொய் கூறான்`` என இயமத்துள் கூறப்பட்டமையானும், மூன்றாம் அடிப் பொருத்த மற்றதாகக் காண்கையிலும் அது பிறர் பாடலாதல் அறியப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage