
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
பதிகங்கள்

வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.
English Meaning:
Inside home and outsideBy force and means gentle
The Lord prepared you—
He dances on the burning ground;
Many and varied are His plays.
Tamil Meaning:
காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. செய்யும் - செய்யுங்கள். பயிற்றிப் பதஞ் செய்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. `கொல்லை, காடு` என்பன ஒருபொருட் சொற்கள். இலயம் - ஒடுக்கம்; பொறுமை. உண்டு ஆம் - உள்ளதாய் (பொருளாய்) நிற்கும். பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன் என்பது உணர்க.இதனால், மகேசுரனுக்கு இனிதாவனவற்றுள் பொறை யுடைமை முதலதாதல் கூறப்பட்டது.
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage