ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்

பதிகங்கள்

Photo

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

English Meaning:
Dandi, that knew the way of Hereafter
Heaped sands into linga shape
And poured on it in adoration
The five products of his herd of cows;
His father seeing beat the boy
And kicked his fond image off;
Dandi flew into a blind rage
And smote the parent`s leg with sword;
And lo! the Lord
Bedecked Dandi with His own garland of flowers forever to sport.
Tamil Meaning:
`செய்யத் தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்கு வதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.
Special Remark:
எனவே, `சிவ வழிபாட்டின் மிக்க வழிபாடும் இல்லை; அதனை இகழ்தலின் மிக்க பாவமும் இல்லை` என்பதும், அங்ஙன மாகவே, `அவ்வழிபாட்டினை இகழ்வார் எவராயினும் அவரைப் பாவிகளாகக் கருதி ஒறுத்தல் பேரறமாம்` என்பதும் குறித்தவா றாயிற்று. தமிழ் நாட்டில் வரலாற்று முறையால் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கி வந்த இவ்வரலாற்றினை நாயனார் இத் திருமந்திரமாக ஆக்கியருளினார். இச்சிறப்புக் கருதித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே.
-தி.3 ப.54 பா.7
என்று அருளிச் செய்தார்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
-தி.4 ப.49 பா.3
என அப்பரும் இதனை வகுத்தோதியருளினார்.
இவையெல்லாம் பற்றித் தொகையாகவும், வகையாகவும் அவ்வக்காலத்தில் வெளிப்பட்ட திருத்தொண்டர் வரலாற்றினை விரிவாகச் செய்தருளிய சேக்கிழார் நாயனார் தமது திருத்தொண்டர் புராணத்துள் இவ்வரலாற்றை விரித்தருளியவாறு இது.
`சோழநாட்டில் திருச்சேய்ஞலூரில் வைதிக அந்தணர் குலத்தில் `எச்ச தத்தன்` என்னும் தந்தைக்கும், `பவித்திரை` என்னும் தாய்க்கும், `விசார சருமர்` என்னும் அரும்பெறற் புதல்வர் ஒருவர் தோன்றினார். அவர் முன்னைத் தவமுதிர்ச்சியால் கல்வியைச் சிறக்கக் கற்று, உபநயனம் பெற்று, வேதம் முதலிய கலைகளினும் வல்லவராய், `சிவபெருமானே முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து, அவனது திரு வடிக்கண் அன்பு மீதூர்ந்து நின்றார். அவர் ஒருநாள் பிற மாணாக் கருடன் வேதம் ஓதிச் செல்லுகையில் வழியில், அவ்வூர்ப் பசு மேய்க்கும் ஆயன், தன்னை முட்டிய பசு ஒன்றினைக் கோலால் நன்கு புடைத்ததைக் கண்டு வருத்தமும் சினமும் கொண்டு, `பசுக்களின் பெருமையை அறியாத நீ இனி இவற்றை மேய்த்தல் வேண்டா; இன்று முதல் யானே இவற்றை மேய்க்கின்றேன்` என்று அன்று முதல் அவ் ஆனிரைகளை அவரே மேய்த்து வருவாராயினார்.
அவர் அப்பசுக் களிடத்துக் கொண்ட உண்மை அன்பால் அப்பசுக்களும் அவரிடம் பேரன்பு கொண்டன. நல்ல மேய்ப்பினால் அவை தம்மை உடை யவர்க்கு முன்னையினும் மிகுதியாகப் பால் தந்தன. அதனால், `இம் மாணியின் மேய்ப்பே நல்ல மேய்ப்பு` என ஊர் அந்தணர் பலரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் பலவும் விசார சருமரைக் காணும் பொழுது தம் கன்றினைக் கண்டாற்போல அன்பு பெருகி நின்றமையால், அவற்றின் மடியில் பால் தானாகவே விம்மிப் பெருகுவதாயிற்று. சிவ வழிபாடு ஒன்றற்கே உரிய பசுக்களின் பால் வீணாவதைக் கண்ட விசார சருமர், அதனைச் சிவபெருமானுக்கு ஆக்கக் கருதித் தாம் பசுமேய்க்கும் மண்ணியாற்றங்கரையில் மணல் இலிங்கம் அமைத்து அப்பாலைக் குடங்களில் ஏற்று ஆட்டி வழிபட்டார்.
இவ்வாறு நாள் பல செல்ல, இதனை அறிந்த ஒருவன், `பசுமேய்க்கின்ற சிறுவன் பாலைக் கறந்து மண்ணியாற்று மணலில் ஊற்றுகின்றான்` என்று அந்தணர்களிடம் சென்று கோள் உரைத்தான். அந்தணர்கள், தமக்குப் பால் குறைவறக் கிடைப்பினும், விசார சருமரது வழிபாட்டின் சிறப்பை அறியாத வர்களாய் அவர் தந்தையாகிய எச்ச தத்தனிடம் கூறினர். எச்ச தத்தன், `நாளைமுதல் இச்செயல் நிகழாதவாறு செய்கின்றேன்` என்று உறுதி கூறி, விசார சருமர் பசு மேய்க்கச் சென்றபின், அவர் அறியாதவாறு அவர் பின்னே சென்று மண்ணியாற்றங்கரையில் ஒரு குராமரத்தின் மேல் ஏறி மறைந்திருந்து, தன் மகனாரது செயல் பலவற்றையும் நோக்கி யிருந்தான்.
அவர் முன்புபோல மணலால் கோயிலும், இலிங்கமும் செய்து, பாலைக் கொணர்ந்து வைத்துப் பூ முதலியவைகளையும் சேர்த்துக் கொணர்ந்து வழிபாட்டில் அமர்ந்து அன்புடன் வழிபடுவா ராய்ப் பாலை எடுத்துக் குடம் குடமாக ஆட்டும்பொழுது எச்சதத்தன் சீற்றம் மிகுந்து இறங்கிச்சென்று மகனாரைவைது, கோல் ஒன்றினால் முதுகில் புடைத்தும் நின்றான்.
ஆயினும் அவற்றை விசார சருமர் பூசை நினைவால் அறிந்திலர். அதனால் எச்ச தத்தன் கோபம் மூண்டு சென்று, அவர் வழிபடும் மணல் இலிங்கத்தைக் (இலிங்கத்தை இடறினமையை வாயால் சொல்லுதலும் கூடாது என்று சேக்கிழார் பாற்குடத்தை இடறியதாகக் கூறினார்) காலால் சிதைத்தான். அதனால் மிக வெகுண்ட விசார சருமர், தம் பக்கத்திருந்த பசுமேய்க் கும் கோலை எடுக்க, திருவருளால் அது மழுவாயுதமாக மாறிற்று. அதனாலே அவர் எச்சத்தத்தனது இரண்டு கால்களையும் துணிந்து வீழுமாறு வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.
விசார சருமர், `இனிச் சிவபூசைக்கு வரும் இடையூற்றை நீக்குவதற்குக் கருவியாக இம் மழுப்படை திருவருளால் கிடைத்தது` என்று மகிழ்ந்து மீளவும் சிவபூசைக்கு ஆவனவற்றைச் செய்ய முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் தேவர், முனிவர், கணங்கள் புடைசூழத் தோன்றிக் காட்சியளித்து, `நம் பொருட்டு நின் தாதையைத் தடிந்த நினக்கு இனி நாமே தந்தை; நீ நம் மகன்` என்று திருவாய் மலர்ந்து, தம் கையால் அவரைத் தழுவி எடுத்து மார்போடு அணைத்து, உச்சிமோந்து சீராட்ட, விசார சருமர் முன்னை மாயா உடம்பு நீங்க, அருளுடம்பு பெற்றுச் சிவகுமாரர் ஆயினார்.
பின்பு சிவபெருமான், `நம்மை வழிபடுவோர் நமக்கு ஆக்கிப் பெறும் நின்மாலியப் பொருள்கள் உனக்கு மட்டுமே உரியனவாக` என அருளிச்செய்து, சிவனடியார் பலர்க்கும் தலைமையாய் அவர்கட்கு அவர் தம் திருத்தொண்டின் பயனை வழங்கும் சண்ட பதவியை அவருக்கு அளித்து, அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியில் உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.
நாயனாரால் தண்டிக்கப் பெற்றமையால், எச்சதத்தனும், அவனைச் சார்ந்தோரும் சிவாபராதத்தால் `எரிவாய் நிரயம் புகாது நீங்கிச் சிவலோகத்தை எய்தினர்`.
`சண்டேசுரர்` என்பது இவரது பதவியாற் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு ஆனிரை மேய்த்து, அத்தண்டே மழுவாகப் பெற்றுப் பிழைசெய்தவனை ஒறுத்தமை பற்றி, `தண்டீசர்` எனவும் அழைக்கப்படுகின்றார். சிவகுமாரர் ஆயினமைபற்றி இவர், `பிள்ளையார் - சேய்ஞலூர்ப் பிள்ளையார்` எனப்படுகின்றார்.
திருத்தொண்டத் தொகை அடியவருள் ஒருவராயினமைபற்றி நாயன்மார்களுள் இவரும் அவருள் ஒருவராய் நின்று திருக்கூட்டத்து வழிபடப்படுதலே யன்றிச் சிவபெருமான் இவருக்கு அளித்த தனிச்சிறப்புக் காரணமாகச் சண்டேசுர நிலையில் நின்று தனி வழிபாடும் பெறு கின்றார்.
அதனால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகமட்டும் வைத்து வழிபட்டுச் சண்டேசுரராக வழிபடாது ஒழிபவர் சிவபெருமானது அருளாணையைக் கடந்தவராவர். அவர்கட்குச் சிவவழிபாட்டின் பயன் கிட்டுதல் அரிது.
இவ்வரலாற்றால் சிவவழிபாடு வீடுபேற்றைத் தரும் என்பது அறியப்படும். மற்றும், `சிவவழிபாட்டிற்கு இடையூறு விளைப்பாரை ஒறுத்தல் பெருஞ் சிவபுண்ணியமாம் என்பது இதனால் விளங்குவது` எனச் சேக்கிழார் திருப்பாசுரத் திருக்குறிப்பருளலில் குறித்தல் காண்க. (தி.12 திருஞான - 839)
`சிவனடியாரால் ஒறுக்கப்பெற்றவர் தம் குற்றம் முழுதும் நீங்கித் தூயராவர்` என்பது, நாயனாரால் தண்டிக்கப்பெற்ற எச்சதத்தன் குற்றம் நீங்கிச் சிவலோகம் புகுந்தமையால் அறியப்படும். `சிவ வழிபாடு நன்கு நடைபெறுதல் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் யாவும் சிறந்த சிவபுண்ணியங்களே` என்பதை மாணிக்கவாசகர்,
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் சிவனருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
-தி.8 தோணோக்கம் ,7
என நன்கு எடுத்து அருளிச்செய்தார்.
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்தசண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூ ருளானே. -தி.7 ப.55 பா.3
என்று நம்பியாரூரர் இனிது விளங்க எடுத்தருளிச்செய்தமை காண்க.
இதனால், சிவபெருமான் சண்டேசுர நாயனாருக்கு வியத்தகும் அறக்கருணை செய்தமை கூறப்பட்டது.