
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
பதிகங்கள்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.
English Meaning:
Unfailing at dawnWith the sun that doth in high heavens
Agastya lights the Fire divine;
He is the holy Muni of North
Whence the Primal Fire was born;
And the radiant light, pervasive-all.
Tamil Meaning:
`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.Special Remark:
`அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியனாகிய, மேல்பால் அங்கி உதயம் செய் (தென்பால்) அவனொடு` எனக் கூட்டுக. `உதயத்தை வளர்க்கும்` என இரண்டாவதும், `அங்கிபோல உதயம் செய்` என உவம உருபும் விரிக்க. மேல்பால் என்றது, சையமலைப் பக்கத்தை. அகத்தியர் முதற்கண் இங்குத் தங்கியிருந்தமையைக் கந்த புராணம் அகத்தியப் படலத்தால் அறிக. மேற்குத் திசை, `குட திை\\\\u2970?` எனப்படுதலால், அகத்தியர் `குடமுனி` எனப்பட்டார். `குடமுனி` என்பதைப் புராணங்கள் `கும்பமுனி` எனப் புனைந்துரைத்தன. `மங்கிய` என்பது ஈறு குறைந்தது. மங்கிய உதயம் - அரிதில் காணப்படுதல். `மங்கி உதயம் செய்` என்பது பாடம் அன்று.``வடபால்`` என்றதனால், `தென்பால்` என்பது பெறப் பட்டது. `வடக்கில் கயிலாய மலையில் சிவபெருமானும், தெற்கில் பொதிய மலையில் அகத்திய முனிவரும் வீற்றிருத்தலாலே இவ்வுலகம் வளப்பமும், ஞானமும் பெற்றுத் திகழ்கின்றது` என்பதாம். இது மேற்கூறிய வரலாற்றைப் பிறிதொரு வகையால் தொடர்புபடுத்து விளக்கியவாறு.
இதனால், அகத்திய முனிவரது பெருமை கூறும் முகத்தால் சிவபெருமானது மெய்யடியார், உண்மையாகவே சிவனோடு ஒப்பவராதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage