
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
பதிகங்கள்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.
English Meaning:
``Hail! Our Lord SupremeThis earthly orb from its epicentre sways,
And dangerous on its side swerves``
Thus they bewailed, the Beings `Celestial
And the Lord spoke;
``Agastya!
You that sit in tapas hard
Amidst the blazing sacrificial fire
Hasten to the globe`s swerving side
And there be seated, its balance to redress.
Tamil Meaning:
ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.Special Remark:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தாங்காது மன்னோ பொறை. -குறள், 990
என்றவாறு உலகம் சான்றாண்மை குன்றி, அழிவெய்தும் நிலை உண்டாகின்றபொழுது, தனது திருவருள் காரணமாகத் தக்காரை நிலவுலகில் விடுத்து அதனைச் செந்நெறி நிற்கச் செய்பவன் சிவபெருமானே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்க உண்மை என்பது நாயனாரது திருவுள்ளக்கிடை என்பது இதன்கண் இருபொருள் படவைத்த சொற்குறிப்புக்களால் அறியப்படும்.
எனவே, ஒருபொழுது இவ்வுலகம் நடுவு நிலைமை பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நிலை யின்றித் (தி.11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 7) தமக்கும், தம்மைச் சார்ந்தவர்க்கும் உளவாகும் நன்மை ஒன்றே பற்றிப் பிறர்க்குக் கேடு சூழும் தன்மை உடையதாய்த் தீநெறிக் கண் சென்றதாக, அதனைப் பொறாது வேண்டிய நல்லோர் சிலரது தவம் முன்னிலையாகச் சிவபெருமான், உயர்ந்த சிவஞானத்தால் அந் நடுவுநிலை உடைய பெரியார் ஒருவரை விடுத்துச் செந்நெறி நிறுத் தினான் என திருமந்திரம் பிறிதொரு பொருளையே சிறப்பாகத் தோற்றுவித்தல் அறிந்து கொள்க. இதனானே, `உலகில் செந்நெறி பிறழுங்காலத்து அதனை நிலைநிறுத்துதற்குக் கடவுளே வந்து பிறக் கின்றான் என்றல் சிவ நெறிக்கு ஒவ்வாது; கடவுள் தனது திருவருள் வழி நிற்கும் பெரியோரை விடுத்தே செந்நெறி நிறுத்துகின்றான் என்பதே சிவநெறிக்கு ஒப்பது` என்பதும் கூறியவாறாயிற்று.
``எம்பெருமான்`` என்றது விளி. என்ன - என்று சொல்லி முறையிட. இதற்கு, `தேவர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``நடுவுள அங்கி அகத்திய`` என்றதற்கு, `இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய` எனவும், `நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய` எனவும் இரு பொருள் கொள்க. இரண்டாவது பொருட்கு, ``நடுவுள`` என்பது, `அகத்திய` என்பத னோடு இயையும். உடலின் நடுவிடத்து இருக்கும் இருதயத்தை ``நடு`` என்றது ஆகுபெயர். முன் - மேல்நிலம்; முதன்மை இடம்.
சிவபெருமான், மலைமகளை மலையரையனிடம் சென்று மணம் புரிந்த ஞான்று தேவர், முனிவர், கணங்கள் முதலிய பலரும் ஒருங்கு கூடினமையால் நிலம் தென்பால் எழுந்து, வடபால் வீழ்ந்து புரள்வதாகலும், தேவரது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்பால் பொதிய மலையிற் சென்று இருக்கச் செய்து, நிலம் முன்போலச் சமனாகும்படி நிறுத்திய வரலாற்றின் விரிவைக் கந்த புராணத்துட் கண்டு கொள்க. `தேவர் முதலிய பலர்க்கு முனிவரொருவர் நிகர்ப்ப இருந்தார்` என்பதனால், சிவனடியாரது பெருமை தோற்றுவித்தவாறாயிற்று. இவ்வரலாற்றுள் நிலம் நிலை குலைந்தமைக்குரிய காரணத்தை நாயனார் எடுத்தோதாது, வரலாறு பற்றியே உணர வைத்தார் என்க.
புராண வரலாறுகள் பலவும், உண்மை நிகழ்ச்சியை மருட்கைச் சுவைபடப் பெரிதும் புனைந்துரைப்பனவும், உண்மைக் கருத்துக்களை உருவகமாக்கி உரைப்பனவும் என இருதிறப்படும். காலப் பழமையால் அவ் இருவேறு திறத்துள் `இஃது இத்திறத்தது` எனப் பகுத்துணர்த்தல் அரிது. ஆயினும் அவ் வரலாறுகளைப் புராணங்கள் பலவிடத்தும், பலகாலத்தும் வலியுறுத்திவருதல், அவற்றின் உண்மை மக்கள் உள்ளத்தில் மறவாது நிற்றற் பொருட்டே என்பது நாயனாரது திருவுள்ளம் என்பதனை இத் தந்திரம் பற்றி உணர்ந்துகொள்க. இத் தந்திரத்துள் குறிக்கப்படும் வரலாறுகளும், இவை போல்வனவுமான தொன்மையான வரலாறுகள் சிவபெரு மானையன்றிப் பிற கடவுளருக்கும் அவர்தம் அடியவர்க்கும் சொல்லப் படாமை கருதற்பாலது என்பது நாயனாரது கருத்து என்க.
இதனால் அகத்திய முனிவர் பொதிகை சென்ற வரலாற்றால் அவரது பெருமை கூறப்பட்டமை வெளிப்படை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage