
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
English Meaning:
Inner Meaning of Golden Tillai DanceThe seven universes as His golden abode,
The five elements, sky and the rest as pedestal
The central Kundalini Sakti as Divine Hall
Thus in rapture He danced,
He that is Cosmic Light.
Tamil Meaning:
பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.Special Remark:
அண்டப் பகுதிகளை எடுத்துக் கூறவே, முன் அதிகாரத்தில் அண்டத்தோடு ஒப்பிக்கப்பட்ட ஒப்புமை பற்றிப் பிண்ட வகைகளும் அடங்கின. அதனால், `பொற்றில்லைக் கூத்துத் தானே அண்டபிண்டம் அனைத்தையும் இயக்குகின்ற கூத்தாம்` எனக் கூறியவாறாயிற்று. இன்னும் ``பரஞ்சோதி`` என்றதனால், ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத அந்தப் பரமசிவன்தானே பொற்றில்லையுள் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான்` என்பது தோற்றுவிக்கப்பட்டது.தண்டு, `தெண்டு` என மருவிற்று. தண்டு - செங்கோல்` நீதி. அஃது உயிர்களை வினை நெறிக்கு உட்படுத்தி ஆளும் ஆளுகையைக் குறித்தது. ``தெண்டினினின்`` என இன்னுருபின் மேல் இன்சாரியை வந்தது சிறுபான்மை வழக்கு உகத்தல் - விரும்புதல். அது தன் காரியந்தோன்ற நின்றது.
கோயிலை, `நகர்` என்றல் பற்றி, `பதி` என்றார். அதனை ஐந்து ஆகாசமாகக் கூறினமையின், அஃது ஐந்து ஆவரணங்களை உடைத்தாதல் விளங்கிற்று. அனைத்தையும் அடக்கி நிற்றல் பற்றிக் கலைகள் `ஆகாசம்` எனப்பட்டன.
இதனால், `தில்லைத் திருக்கோயிலின்கண் உள்ள திருவம்பலத்தில் செய்யப்படும் திருக்கூத்தே பொற்றில்லைக் கூத்தாம்` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage